Heart Attack வந்தாலும் உங்களை காப்பாற்றும் அசத்தலான கார் அறிமுகம்
சாரதி திடீரென நோய்வாய்ப்பட்டாலும் விபத்து ஏற்படுவதனை தவிர்க்கும் வகையிலான தானியங்கி தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீன இலத்திரனியல் வாகன உற்பத்தி நிறுவனமொன்று இந்த வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவின் பெய்யொன்கா(BeyonCa) என்ற நிறுவனத்தினால் இந்த நவீன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சன நெரிசல் மிக்க ஓர் சாலைப் பகுதியில் வைத்து வாகன சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டாலும் விபத்து ஏற்படுவதனை இந்த வாகனம் தவிர்க்கின்றது.
சாரதியின் உடல் நிலையை முழுமையாக வாகனத்தின் தானியங்கி கட்டமைப்பு தொடர்ச்சியாக கண்காணிப்பு செய்யும் என பெய்யொன்கா நிறுவனத்தின் பணிப்பாளர் ஸோ வீமிங் தெரிவிக்கின்றார்.
Bloomberg
இந்த வாகனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் எனவும் 2024ம் ஆண்டில் சந்தையில் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல பீ.எம்.டபிள்யூ எ.ஜீஸ்7 (BMW AG’s 7 Series) மோட்டார் காருக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ளது. இந்த வாகனத்தின் விலை 123000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
சாரதியின் உடல் நிலை குறித்து கண்காணிப்பதற்கான கமராக்கள் உள்ளிட்ட விசேட கருவிகள் காரில் பொருத்தப்பட்டுள்ளன.
Bloomberg
செயற்கை நுண்ணறிவு முறைமை காணப்படுவதாகவும், சாரதிக்கு ஏதேனும் நோய்வாய் என தென்பட்டால் அந்த கட்டமைப்பு சாரதியுடன் உரையாட முனையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாரதியிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காவிட்டால், வாகனத்தின் கட்டுப்பாட்டை இந்த இலத்திரனியல் தானியங்கி கட்டமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டு செயற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.