கனடாவில் நடந்த அதிசயம்! வீட்டிற்குள் விழுந்த விண்கல் - நூலிழையில் உயிர் தப்பித்த பெண்
கனடாவில்- பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் ரூத் ஹாமில்டன் என்ற பெண் தூங்கி கொண்டிருக்கும் போது திடீரென பயங்கர சத்தம் மற்றும் புகை வாசனை காரணமாக விழித்துக் கொண்டார்.
இந்த சம்பவம் அக்டோபர் 4 இரவு நடந்தது என்று கூறப்படுகிறது. ஹாமில்டன் விக்டோரியா நியூஸிடம் இது குறித்து கூறுகையில், 'நான் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு எழுந்து லைட்டை ஆன் செய்தேன்.
என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கு முன் ஒரு இரவில், லூயிஸ் ஏரி அருகே விண்கற்கள் விழுந்ததை மக்கள் பார்த்தனர்’ என்றார்.
இந்த திகிலூட்டும் சம்பவத்தில், ஹாமில்டன் தப்பினார். படுக்கை அறை லைட்டை ஆன் செய்ததும், அவரது தலையணையில் ஒரு விண்கல் (Meteor) விழுந்திருப்பதைக் கண்டார்.
அவர் உதவி எண்ணான 911 க்கு போன் செய்து அருகில் உள்ள கட்டுமான தளத்திலிருந்து வந்ததா என்று கண்டுபிடிக்க முயன்றார்.
ஆனால், விசாரணையில், விண்வெளியில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் வந்ததாகக் அங்கிருந்த மக்கள் கூறினர்.
இதன் பிறகு ஹாமில்டனின் வீட்டில் ஒரு விண்கல் விழுந்தது தெளிவாகியது. இந்த திகிலூட்டும் அனுபவத்தைப் பற்றி ஹாமில்டன் கூறுகையில், சத்தத்தை கேட்டு யாரோ கூரையை உடைக்கிறார்கள் அல்லது துப்பாக்கியினால் சுடுகிறார்கள் என நினைத்து பயந்தேன்.
விண்கல் விண்வெளியில் இருந்து விழுந்தது என்பதை உணர்ந்தபோது, மயிரிழையில் உயிர் தப்பித்ததை நினைத்து நிமத்தி பெருமூச்சு விட்டேன் என்றார். விண்கல்லை பேரக்குழந்தைகள் பார்க்க வேண்டும் என அவர் பாதுகாத்து வைத்திருக்கிறார்.
இந்த சம்பவம் தனக்கு வாழ்க்கையைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.
வாழ்க்கை விலைமதிப்பற்றது, அதை எந்த நேரத்திலும் இழக்கலாம்.நீங்கள் உங்கள் சொந்த வீட்டில் பாதுகாப்பாக தூங்கும் போது உயிரிழக்கலாம் என அவர் கூறினார்.