குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பூக்களை இறைவனுக்கு சாத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? எச்சரிக்கை
பொதுவாக வீடுகளில், பூஜை அறையில் அலமாரியில் அல்லது சுவரில் சட்டம் அடித்து அதில் சுவாமி படம் மாட்டி வைத்து அதற்கு தினமும் பூ வைத்து வழிபடுவது வழக்கம்.
சிலர் முந்தைய நாள் இரவிலேயே பூவை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்து விடுகிறார்கள்.
அதை. மறுநாள் பயன்படுத்துகிறார்கள். ஒரு சிலர் வாரம் ஒருமுறை மலர்கள் வாங்கிப் பாதுகாத்துவைத்துவிடுவார்கள்.
ப்ரிட்ஜ் எதற்காக..?
பொருள்களை வீண் ஆகக்கூடாது என்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ப்ரிட்ஜ் தற்காலத்தில் ஓர் அலமாரிபோல மாறிவிட்டது.
கெட்டுப்போகும் தன்மையுள்ள பலபொருள்களையும் அதில் வைத்துவிடுகிறோம். சமைத்த உணவு, சமைக்க வேண்டிய காய்கறி, அரைத்த மாவு, வாங்கிய பால் என சகலமும் அதில் இருக்கின்றன.
ஒரு வீட்டின் அவசியமான பொருளாக அது மாறிவிட்டது. அப்படிப்பட்ட ப்ரிட்ஜ் பயன்பாடுகளில் ஒன்றாக பூக்களை வைத்துப் பாதுகாப்பதும் சேர்ந்துகொண்டது.
இறைவனுக்காக பூக்கள்
புஷ்பங்கள் இறைவனுக்கானது அதில் எந்த சந்தேகமும் இல்லை. சாஸ்திரக் கண்ணோட்டத்தில் பார்த்தால், புஷ்பங்களில் ஆராதனைக்கு உரியன, அல்லாதன என்று வித்தியாசம் சொல்லப்பட்டிருக்கிறது.
சில புஷ்பங்கள் கீழே விழுந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். சிலவற்றை மரத்திலிருந்து பறிக்க வேண்டும். ஆகமங்களில் இறைவனுக்கான மலர்களைப் பறிக்கும்போது வண்டுகள் மலர்களைத் தொடுவதற்கு முன்பாகப் பறித்துவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அன்று பூத்த புஷ்பங்களை அன்றே சார்த்த வேண்டும்; அடுத்த நாள் சார்த்தக் கூடாது என்று ஆகமம் சொல்கிறது. பாரிஜாத புஷ்பத்தை உலுக்கி எடுக்க வேண்டும்.
செம்பருத்தி, தாமரை ஆகியவற்றைப் பறிக்க வேண்டும். கீழே விழுந்தால் எடுக்கக் கூடாது.
இந்தச் சட்ட- திட்டங் களைப் பார்க்கும்போது அந்தக் காலத்தில் விஸ்தாரமான இடங்களில் வசித்து, நிறைய பூச்செடிகளை வளர்த்துக் கொண்டு தினப்படி பூஜை செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது.
இறைவனுக்கான பூக்களும் இப்போது நாம் புஷ்பத்தைப் பார்க்கும் நிலையில் இல்லை. தரையையே பார்க்க முடியாத இடத்துக்கு நமது வீட்டைப் பெயர்த்துக் கொண்டு வந்திருக்கிறோம்.
கிடைக்கும் மலர்களை வாங்கி ப்ரிட்ஜில் வைத்துப் பாதுகாத்து வழிபாடுகள் செய்கிறோம். நம் தர்மசாஸ்திரம் இப்படியான சூழல்களுக்காகவே சில உபாயங்களையும் சொல்லிவைத்திருக்கிறது.
துளசியையும் வில்வத்தையும் 4 நாள்கள் வைக்கலாம். ப்ரிட்ஜ் தேவையில்லை. காய்ந்து பொடிப்பொடி ஆனாலும் அவற்றை சாமிக்கு சமர்ப்பிக்கலாம் என்கிறது.
தாமரைப் பூவை 2 நாள் வைத்திருக்கலாம் என்கிறது. தினமும் மலர் வாங்கும்போதும் பறிக்கும்போதும் அது இறைவனுக்கானது என்ற நினைவு நமக்குள் ஆழமாகப் பதியும்.
அப்போது நாம் செய்யும் பூஜைகளுக்குக்கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
விற்பனையாகும் மலர்களில் தேதி அறிந்து நாம் வாங்க முடியாது. எனவே குறைந்த பட்சம் அன்று வாங்கிய மலர்களையே இறைவனுக்கு சாத்தி வழிபடுவோம்.
அல்லது துளசி, வில்வம் சமர்ப்பித்து வழிபடுவோம். முடிந்தவரை நீண்ட நாள்கள் பாதுகாத்து வழிபடும் முறையைத் தவிர்ப்போம்.