வெங்காயம், தக்காளி இல்லாமலே குழம்பு செய்யலாமா? முட்டைகோஸ் குழம்பு இப்படி செய்து பாருங்க
நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கியமான பொருட்கள் தான் தக்காளி மற்றும் வெங்காயம். இதை தவிர்த்து குழம்பு செய்வது என்றால் பலருக்கும் எப்படி ஆரம்பிப்பது என்பதே குழப்பமாக இருக்கும்.
தக்காளி மட்டுமின்றி, வெங்காயமும் சேர்க்காமல் அட்டகாசமான சுவையில் முட்டைக்கோஸ் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேக வைத்து அரைப்பதற்கு தேவையானவை
முட்டைக்கோஸ் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
கத்திரிக்காய் - 5 (நறுக்கியது)
பூண்டு - 10 பல்
புளி - 1 பெரிய எலுமிச்சை அளவு
தண்ணீர் - 1 டம்ளர்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
குழம்பிற்கு தேவையானவை
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் குக்கர் ஒன்றில் முட்டைக்கோஸ், கத்திரிக்காய், பூண்டு, புளி, 1 டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் வரும் வரை விட்டு பின்னர் இறக்கி ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆறியதன் பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் காய்கறிகளை போட்டு, மென்மையான பேஸ்ட் பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் வரை கிளறிவிட வேண்டும்.
அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி, உயர் தீயில் வைத்து கொதிக்க ஆரம்பித்த பின்னர் தீயைக் குறைத்து 10 நிமிடங்கள் வரையில் மூடி வேகவிட வேண்டும். (இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்)
பின்னர் மூடியைத் திறந்து கிளறி, குறைவான தீயில் 3 நிமிடங்கள் வரையில் கொதிக்க வைத்து இறக்கினால், அட்டகாசமான சுவையில் முட்டைகோஸ் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |