கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. அதிரடி அறிவிப்பால் குவிந்த மக்கள்!
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100 ஐ நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அன்றாட பொருட்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சியில் உள்ள பேக்கரி ஒன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேக்கரியில் 1 கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை திறப்பு விழா ஆஃபராக அறிவித்துள்ளார் பேக்கரி உரிமையாளர் சகாயராஜ். மேலும், அங்கு ரூ.600 முதல் ரூ.1500 வரை பல்வேறு விதமான கேக்குகள் உள்ளன, இந்நிலையில் இந்த கேக்குகளை வாங்குபவர்களுக்கு 1 லிட்டர் முதல் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது.
கேக் வாங்குபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அதை கொண்டு குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம். இதற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய உரிமையாளர் சகாயராஜ், 'எங்களுடைய பேக்கரி கடை திறப்பின் போது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் சலுகையை அறிவிக்க வேண்டும் என திட்டமிருந்தோம்.
அப்போது தான் மற்ற இலவசங்களை வழங்கினால் அவர்களுக்கு பெரிய அளவில் பயன் இருக்காது என எண்ணிக்கொண்டிருக்கையில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கொடுத்தால் என்ன என்று நினைத்து 'ஒரு கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்' என அறிவித்தோம்.அதுமட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களை கவர்வதற்கான இது ஒரு சூசகமான வழி' எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சலுகை ஒரு மாதம் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் பேக்கரி உரிமையாளர் சகாயராஜ்.