சிலையாக வந்து நின்ற இறந்த சகோதரி! ஊருக்கே விருந்து வைத்து ரக்ஷா பந்தன் கொண்டாடிய குடும்பம்
சாலை விபத்தில் உயிரிழந்த சகோதரிக்கு சிலை வைத்து ஆந்திராவில் ரக்ஷா பந்தன் பண்டிகையை சகோதர, சகோதரிகள் கொண்டாடியுள்ள புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த சகோதரி
இந்தியாவில் ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், கத்திபூடி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் மணி (29). இவருக்கு கணவர் மற்றும் 2 பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் மணி உயிரிழந்துள்ளார்.
மணியை பிரிந்து கணவர், குழந்தைகள், உடன்பிறந்தவர்கள் என அனைவரும் மீளா துயரில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், குறித்த பெண்ணின் சகோதர, சகோதரிகள் தனது தங்கையை சிலையாக வடித்து ரக்ஷா பந்தனை கொண்டாடியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் பண்டிகையை குடும்பத்துடன் கோலாகலமாக கொண்டாடும் நிலையில், இந்த வருடம் மணி சாலை விபத்தில் உயிரிழந்தது அனைவரையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

தங்கைக்கு சிலை வைத்து கொண்டாட்டம்
தங்கையின் நினைவாக அவருக்கு ஆள் உயர சிலை ஒன்றினை செய்ததோடு, சிலையாக நின்ற சகோதரியின் கையில் ராக்கி கட்டி குடும்பத்தினர் ரக்ஷா பந்தனைக் கொண்டாடியுள்ளனர். அதுமட்டுமின்றி ஊரையே அழைத்து விருந்தும் வைத்ததோடு, சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று பட்டாசுகளையும் வெடித்துள்ளனர்.
இதுகுறித்து இளைய சகோதரர் ராஜு கூறுகையில், ‘‘என் அக்கா மணி மிகவும் அன்பானவர். யாருக்கும் சிறு கெடுதல் கூட நினைக்காதவர். அவருடைய திருமண வாழ்க்கை கூட மிகவும் நன்றாக அமைந்தது.
ஆனால், ஒரு பண்டிகையின் போது பைக் விபத்தில் மணி உயிரிழந்தார். தயவு செய்து பைக்கில் செல்லும் போது ஹெல்மெட் அணியுங்கள். அது உங்களின் உயிரை காக்கும்’’ என்று கண் கலங்க கூறியுள்ளார்.