தங்கையை அசிங்கமாக பேசிய நண்பன்: சுடுகாட்டில் நடந்த துயரம்
வேலூர் கஸ்பாவில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேரை கைது செய்த பொலிசார் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வேலூர் கஸ்பா எடத்தெருவை சேர்ந்தவர் புஜ்ஜி என்கிற விக்னேஷ் (24). பால் கறக்கும் தொழிலாளியான இவர், நேற்று காலை சுடுகாடு ஒன்றில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார்.
அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்தி வெட்டு காயங்கள் இருந்த தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இளைஞரை சுடுகாட்டிற்கு அழைத்து வந்து வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், உயிரிழந்த வாலிபரின் வீட்டில் விசாரித்துள்ளனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் கரிமுல்லா என்கிற விஜயகுமார்(26), பெருமாள் நகரைச் சேர்ந்த விஷ்ணு(25), கஸ்பா சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த சுபாஷ் (21), செல்வ புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற நவீன் (20), கஸ்பா மசூதி தெருவைச் சேர்ந்த அசார் என்கிற காஜா கவுஸ் முகைதீன் (23)ஆகியோருடன் வெளியே சென்றது தெரியவந்தது.
ஐந்து பேரையும் அழைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பகீர் உண்மை வெளியாகியுள்ளது. விக்னேஷ் அவரது நண்பர்கள் கரிமுல்லா என்கிற விஜயகுமார் உள்பட 5 பேருடன் சேர்ந்து கஸ்பா சுடுகாட்டில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.
அப்போது விஜயகுமாரின் தங்கை குறித்து விக்னேஷ் கேலி கிண்டல் செய்து ஆபாசமாக பேசியுள்ளார். இதனை விஜயகுமார் தட்டி கேட்டார். இதனால் நண்பர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் விக்னேஷை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் துடிதுடித்து இறந்துள்ளதும் தெரியவந்துள்ளது.