Broccoli Fry: புற்றுநோயை தடுக்கும் ப்ராக்கோலி மிளகு வறுவல்
ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அருமருந்தாகவும் பார்க்ப்படுகின்றது.
இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் செறிந்து காணப்படுவதால், உடல் நலம் மட்டுமல்லாமல் மனநலம்,ஞாபக சக்தி, ஆகியவற்றையும் சீராக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
ப்ராக்கோலியில் கால்சியம் அதிகமாக காணப்படுவதால், பல் மற்றும் எலும்பினை வலுவாக்குவதுடன், பல் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருக்கின்றது.
ப்ராக்கோலி புற்றுநோய் பாதுகாப்பு காரணியாக உள்ளது, இதன் தன்மையானது புற்றுநோய் ஏற்படுத்து செல்களுக்கு எதிராக செயல்படுகின்றது. இது உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் பெரிதும் உதவுகின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட ப்ராக்கோலியை கொண்டு அருமையான சுவையில் ப்ராக்கோலி மிளகு வறுவல் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ப்ராக்கோலி - 1
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
வெள்ளை எள்ளு - 2 தே.கரண்டி
மிளகுத் தூள் - 2 தே.கரண்டி
சீரகத் தூள் - 1 தே.கரண்டி
சோம்புத் தூள் - 1 தே.கரண்டி
எண்ணெய் - 2 தே.கரண்டி
பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி,அதில் நறுக்கிய ப்ராக்கோலியை போட்டு அடுப்பில் வைத்து, அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எள்ளு விதைகளை சேர்த்து, வாசனை வரும் வரையில் நன்கு வறுத்து, தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் மிளகுத் தூள், சோம்புத் தூள், சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களையும் அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிதளவு உப்பு தூவி, வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் ப்ராக்கோலியை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு, அதனுடன் வறுத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடங்கள் வேகவிட்டு, இறுதியாக எள்ளு விதைகளைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த ப்ராக்கோலி மிளகு வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |