வீட்டில் கத்தரிக்காய் இருக்கா? அப்போ நெருப்பில் சுட்டு இப்படி சட்னி செய்ங்க - 2 நாள் கெடாது
வீட்டில் இருக்கும் இரண்டு கத்தரிக்காயை வைத்து இட்லி, தோசை, சப்பாத்தி, சூடான சாதத்திற்கு ஏற்றவாறு நெருப்பில் சுட்டு ஒரு அருமையான சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.
நெருப்பில் சுட்ட கத்தரிக்காய் சட்னி
பொதுவாக எல்லோர் வீட்டிலும் எல்லா உணவு வகைக்கும் ஒரு சட்னி செய்யாமல் விட மாட்டார்கள். அவற்றில் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மிளகாய் சட்னி என பல வகை சட்னிகளை நமக்கு தெரியும்.
ஆனால் கத்தரிக்காயை சுட்டு அதை வைத்து செய்யும் சட்னியை யாராவது அறிந்தது உண்டா? அதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றாம்.
கத்தரிக்காய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேன்படுத்தும்.
மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தவிர இதில் இன்னும் பல சத்துக்களும் உள்ளது.
சட்னி செய்ய தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய் - 1 பெரியது
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2 சிறியது
- பூண்டு - 4 பல்
- பச்சை மிளகாய் - 3
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவைக்கேற்ப
- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் கத்தரிக்காயை எடுத்து அதன் மேல் எண்ணை தடவி அதை 8 நிமிடங்கள் நெருப்பில் சுட வேண்டும். சுட்ட இந்த கத்தரிக்காயின் தோல் கறுப்பு நிறமாக மாறி வெடித்ததும் இதை தண்ணீரில் போட்டு தனியே எடுத்து வைக்க வேண்டும்.
இதே போல தக்காளியையும் நெருப்பில் மூன்று நிமிடங்களுக்கு சுட்டு அதையும் தண்ணீரில் போட்டு வைத்தக்கொள்ள வேண்டும். இரண்டும் நன்றாக ஆறியவுடன் அவற்றின் கருகிய தோல்களை அகற்றி வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்க வேண்டும்.
இந்த சுட்ட கத்தரிக்காய் மற்றும் தக்காளியை எடுத்து நன்றாக மசித்து வைக்க வேண்டும். அடுத்து பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் போட்டு கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கலந்துகொள்ளுங்கள். வெங்காயம் ஒரு அளவிற்கு வதங்கினால் போதும். பின்னர் அதில் நறுக்கிய பூண்டு பல் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்.
பின்னர் அவற்றுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். இப்போது மசித்த கத்திரிக்காய் மற்றும் தக்காளியை சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
சட்னி தண்ணீர் பதத்தில் வேண்டும் என நினைப்பவர்கள் தண்ணீர் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளலாம். கடைசியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான நெருப்பில் சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |