அண்ணன் கூறிய ஒற்றை வார்த்தை! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
மாப்பிள்ளை பிடிக்கவில்லை என அண்ணன் கூறியதால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணமேடையில் மணப்பெண்
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞருக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று காலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் நடைபெற இருந்தது. இதனால் இரு வீ்ட்டு உறவினர்களும் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். முகூர்த்த நேரம் நெருங்கியதை அடுத்து மணமகளை அலங்கரித்து மணமேடைக்கு அவரது உறவினர்கள் அழைத்து வந்தனர்.
மாற்றுத்திறனாளியான மணமகன், சென்னை ஐஐடியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி இறந்துவிட்டார். அதனால் இரண்டாவது திருமணத்துக்காக சிதம்பரத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அண்ணன் கூறிய வார்த்தையால் நின்ற திருமணம்
மணமகன் குறித்து அறிந்த மணமகளின் அண்ணன், மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். மேலும், இதை மீறி திருமணம் செய்து கொண்டால் தாய் உயிரை மாய்த்துக் கொள்வதாக தங்கையிடம் கூறியுள்ளார். இதனால் மணப்பெண், தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று கூறி மணமேடையில் இருந்து கீழே இறங்கினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மணப்பெண் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் திருமண மண்டபத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். தனது அண்ணனுக்கு மாப்பிள்ளை பிடிக்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.