உடலில் ஏற்படும் முக்கிய பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும் பிரண்டை.. எப்படி சாப்பிடலாம்?
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன.
சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.
நன்றாக முற்றிய பிரண்டைத் தண்டுகளைச் சிறு துண்டுகளாக நறுக்கி மோரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைத்து உலர்த்தி வற்றலாக செய்து கொள்ள வேண்டும் இந்த வற்றலை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட பசியின்மை, நாக்குச் சுவையின்மை ஆகியன குணமாகும். பிரண்டைச் சாறு உடம்பில் பட்டால் அதிகமான அரிப்பும் நமைச்சலும் ஏற்படும்.
வேர், தண்டு ஆகியவை அதிகமான மருத்துவப் பயனுள்ளவை. தண்டு கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. பிரண்டையை துவையல் செய்து சாதத்துடன் சேர்த்துப் சாப்பிட்டு வர இரத்த மூலம் குணமாகும்.
மேலும் வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும், உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும்.
பிரண்டைத் துவையலை குழந்தைகளுக்குத் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.
அடிபட்ட வீக்கம் குணமாக பிரண்டையிலிருந்து சாறு எடுத்து புளி, உப்பு சேர்த்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் அடிபட்ட இடத்தில் மேல் பூச்சாகப் பற்றுப் போட வேண்டும்.
உடலைத் தேற்றும் பிரண்டையை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய் அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.
மூலம் மற்றும் வயற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்குவதற்கும் பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.