பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மாணவ போராளி! குவியும் பாராட்டுக்கள்
டெல்லியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தைக்கு ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவ போராளி ஸபூரா ஸர்கர் தாய்ப்பால் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று இந்தியாவையே உலுக்கி வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிட்டு உயிரிழந்துவிட்டார்.

தாய்ப்பால் வாசத்தையே அறியாத அந்த பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பாலை தானமாக அளிக்க பாலூட்டும் ஒரு தாய் தேவைப்படுகிறார், தயவு செய்து உதவுங்கள் என மூத்த பத்திரிகையாளர் மனிஷா மொன்டால் தனது ட்விட்டரில் கேட்டிருந்தார்.
இதை பார்த்ததும் நான் இருக்கிறேன் என இளம்தாயான ஸபூரா ஸர்கர் முன்வந்துள்ளார். அந்த குழந்தைக்கு பாலூட்ட நான் தயார் என பதில் ட்வீட் அளித்திருந்தார்.
ஸபூராவின் இந்த மனிதநேயத்தை ட்விட்டரில் பார்த்த ஏராளமானோர் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
பலர் நெகிழ்ச்சியில் அற்புதமான மனிதர் நீங்கள் என அவரை பாராட்டியுள்ளார்கள்.