Bottle gourd Chutney:சுரைக்காயில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க சுவை அள்ளும்!
சுரைக்காய் என்பது அதிக நீர்ச்சத்து கொண்ட, கோடை காலத்தில் விளையும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு வகை காய்கறி ஆகும்.
சுரைக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்கக் கூடியதாக இருக்கும். இது இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது.
உடலையும் கல்லீரலையும் நச்சுத்தன்மை இல்லாமல் ஆக்குகிறது. மேலும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது.
இதில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை கண்களின் செயல்பாட்டிற்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் பெரிதும் துணைப்புரியும்.
அத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சுரைக்காய் வைத்து வழக்கமாக சாம்பார் செய்யாமல் சற்று வித்தியாசமான முறையில் சட்னி செய்து பாருங்கள். எப்படி எளிமையான முறையில் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய் - 250 கிராம்
எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடியளவு
பூண்டு - 15 பல்
வரமிளகாய் - 3
பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் சுரைக்காயை சுத்தம் செய்து தோல் நீக்கி, பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில், சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய் ஆகியவற்றை போட்டு வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள சுரைக்காயையும் போட்டு நிறம் மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியையும் போட்டு நன்றான எல்லாவற்றையும் கிளறிவிட்டு வதக்கி, இறக்கி ஆறவிட வேண்டும்.
ஓரளவுக்கு ஆறியதும் அவற்றை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, தேவையானளவு உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து, அதனை சட்னியுடன் சேர்த்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் சுரைக்காய் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |