பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு வந்த நோய்! ரத்த நாளங்களை வெடிக்க வைக்கும் நோய் எப்படி வருகிறது?
சில நாட்களுக்கு முன்பு பிரிட்டனுக்கு இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த 59 வயதான பிரபல தமிழ் திரைப்பட பிண்ணனி பாடகியும் கர்நாடக சங்கீத இசையில் விற்பன்னருமான பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கு மூளையில் அநியூரிசம் ஏற்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றப்பட்டுள்ளார்.
அநியூரிசம் என்றால் என்ன? அதற்கான அறிகுறிகள் என்ன? ஏற்படுதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விளக்கம் கொடுக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா.
அநியூரிசம் என்றால் என்ன?
ரத்த நாளங்களின் சுவர்களில் ஸ்திரத்தன்மை இழந்து பலூன் போல சில இடங்களில் பெரிதாக ஆவது "அநியூரிசம் " என்று அழைக்கப்படுகிறது.
அநியூரிசம் பெரும்பாலும் மகா தமனியில் மூளையில் முழங்காலுக்குப் பின் பகுதியில் குடல் பகுதியில் மண்ணீரல் பகுதியில் ஏற்படக்கூடும் யாருக்கு அநியூரிசம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்?
- கட்டுப்படுத்தப்படாத ரத்தக் கொதிப்பு
- கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு
- முதியோர்
- பெண் பாலினத்தில் மூளையில் அநியூரிசம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்
- மது மற்றும் புகை பழக்கம் இருப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம்
- ஏற்கனவே குடும்பத்தில் இதே பிரச்சினை ஏற்பட்டவர்கள்
- சிறுநீரகம் சார்ந்த நோய்கள் இருப்பவர்களுக்கு குறிப்பாக பாலிசிஸ்டிக் கிட்னி நோய் இருப்பவர்கள்
- மூளையில் சிரை மற்றும் தமனியின் உருவாக்கத்தில் கோளாறுகள்
அநியூரிசம் இருப்பின் அறிகுறிகள் என்ன?
- தலைசுற்றல்
- மயக்கம்
- வாந்தி குமட்டல்
- பார்வை மழுங்குவது
- பார்வை ரெண்டாகத் தெரிவது
- இதயத்துடிப்பு அதிகமாவது
- மூச்சுத் திணறல்
- நெஞ்சுப் பகுதியில் அதீத வலி
- வலிப்பு அடிக்கடி ஏற்படுவது
- மயக்க நிலை போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம்
தொடர்ந்து அநியூரிசம் சரி செய்யப்படாமல் போனால் அநியூரிசம் வெடித்து மூளையில் ரத்தக் கசிவு ஏற்படக்கூடும். இது மருத்துவ அவசர நிலையாகும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து ரத்த நாள அநியூரிச சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்படும்.
இது போன்ற வெடிப்பு ஏற்படும் முன்னரே அறிந்து அறுவை சிகிச்சை செய்வது சிகிச்சையின் வெற்றியை பன்மடங்கு உயர்த்தும் -
அநியூரிசம் ஏற்பட்ட ரத்த நாளத்தில் ஸ்டெண்ட் வைப்பது
அநியூரிசம் ஏற்பட்ட பகுதியை நீக்கி விட்டு பைபாஸ் கிராப்ட் வைப்பது
எண்டோவாஸ்குலார் காய்லிங் ( ரத்த நாளத்துக்குள் சுருள் வைக்கும் அறுவை சிகிச்சை )
க்ளிப்பிங் அறுவை சிகிச்சை போன்றவை செய்யப்படும்.
அநியூரிசத்தை தவிர்க்கவும் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையை அடையாமல் இருக்கவும் இன்றே உங்களது ரத்தக் கொதிப்பை கட்டுக்குள் வைக்கவும் நீரிழிவை கட்டுக்குள் வைக்கவும் மது / புகை பழக்கத்தை உடனே கைவிடவும்.