ஒத்த ஓட்டு பாஜக.... இந்திய அளவில் ட்ரெண்டான பாஜக வேட்பாளர்! குடும்பத்தினர் கூட வாக்களிக்காத சோகம்
கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வந்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9-வது வார்டுக்கு இடைத்தேர்தல் நடந்தது. திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அங்கு மொத்தம் 1,551 வாக்குகள் இருக்கிறது.
இந்நிலையில், தேர்தலில் 913 வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அருள்ராஜே முன்னிலை வகித்து வந்தார். அருள்ராஜ் 387 வாக்குகள் பெற, அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றிருந்தார்.
அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளை பெற்றிருந்தார். 3 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அருள்ராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிக ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றனர். கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். ‘கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். அவரது குடும்பத்தினர், கட்சியினர் வாக்களித்திருந்தாலே இதைவிட அதிகம் வாக்கு வாங்கி இருக்கலாம். ஆனால், குடும்பத்தினர் கூட அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை’ என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகிறது.
இதை யடுத்து, #ஒத்த_ஓட்டு_ பாஜக, #Single_ Vote_ BJP என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதுமட்டுமின்றி நெட்டிசன்களும் மீம்ஸை தெரிக்கவிட்டுள்ளனர்.

