உங்க குழந்தைகளுக்கும் பாகற்காய் பிடிக்காதா? இப்படி குழம்பு செய்தா எல்லாருக்கும் பிடிக்கும்!
கசப்பாக இருந்தாலும் பல்வேறு ஆரோக்கியம் நன்மைகளையும் மருத்துவ குணங்களையும் கொண்ட ஒரு காய்கறி தான் பாகற்காய்.
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க இது பெரிதும் துணைப்புரிகின்றது.
குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
ஆனால் பாகற்காய் என்றதுமே குழந்தைகள் அதனை தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். இதற்கு காரணம் அதன் கசப்புத்தன்மை தான்.
கசப்பே இல்லாமல் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் எப்படி பாகற்காய் குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாவக்காய் - 200 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சிறிது
புளி - 1 எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
வெங்காயம் - 2
பூண்டு - 15 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லித் தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சிறிது
வெல்லம் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் பாகற்காயை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய பாகற்காயுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.(இவ்வாறு செய்வதன் மூலம் கசப்புத்தன்மை முற்றாக நீங்கிவிடும்)
பின்னர் புளியை நீரில் ஊற வைத்து கெட்டியான பதத்தில் புளி கரைசலை தயார் செய்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஊற வைத்த பாகற்காயை நன்றாக நீரில் அலசி தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் 3 கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கிய பின்னர், வதக்கிய பாகற்காயை அதில் சேர்த்து கிளறிவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு, புளி நீரை ஊற்றி 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இறுதியாக வெல்லத்தை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பாவக்காய் குழம்பு தயார். இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்தால் குழந்தைகள் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |