தாலிபான்களால் பிரியாணி விலையில் ஏற்பட போகும் அதிரடி மாற்றம்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருப்பதால் ஹைதராபாத் பிரியாணி விலை விரைவில் ஏறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அடக்குமுறையாக செயல்பட்டு வருகின்றனர் என்பது உலகம் அறிந்த ஒன்றே.
வன்முறை வெறியாட்டங்களை ஆண்டுக்கணக்கில் நிகழ்த்தி வந்த தாலிபான்கள் கையில் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் சென்றுவிட்டது.
தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றியிருக்கும் நிலையில் இந்தியாவில் பிரபல ஹைதராபாத் பிரியாணி உணவு வகையின் விலை எகிறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தாலிபான்கள் பாகிஸ்தான் வழியாக நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்தை நிறுத்தியிருக்கின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவுக்கு இறக்குமதி ஆகி வந்த உலர் பழங்களின் விலையில் பெரும் உயர்வு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
இந்தியா கிட்டத்தட்ட 85% உலர் பழங்கள் இறக்குமதியை ஆப்கானிஸ்தானிடமிருந்தே பெற்று வந்தது. இந்த உலர் பழங்கள் தான் ஹைதராபாத் பிரியாணி உணவு வகையின் சிறப்புக்கு அஸ்திவாரமாக இருந்து வருகிறது.
இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பின் இயக்குனர் ஜெனரலான டாக்டர் அஜய் சஹய் இது குறித்து கூறுகையில், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
ஆப்கனில் இருந்து இந்தியாவுக்கான இறக்குமதி அனைத்து பாகிஸ்தான் வழியாகவே வந்து கொண்டிருந்தது. தாலிபான்கள் தற்போது அந்த வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்துக்கு தடை விதித்திருப்பதால் இந்தியாவுக்கான இறக்குமதி முற்றிலும் தடைபட்டிருக்கிறது.
அந்த வழித்தடத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்கப்படவில்லை என்றால் தற்போது கையிருப்பில் உள்ள உலர் பழங்கள் தீர்ந்து போவதுடன் மாற்று இறக்குமதி வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும் என்றார்.