ஆசிட் அடிப்பதாக மிரட்டும் முன்னாள் கணவர்: பிக்பாஸ் இசைவாணி பரபரப்பு புகார்
பிக்பாஸ் இசைவாணி தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கானா பாடகியான இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வந்த பாதை டாஸ்கில் கூட இவரது திருமண வாழ்க்கையை இவர் கூறாமல் மறைத்துவிட்டார்.
இந்நிலையில் பிக்பாஸை விட்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய இசைவாணி தற்போது தனது கணவர் குறித்து புகார் அளித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை சக கானா பாடகர் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பின்பு சில ஆண்டுகளில் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் இசைவாணி.
விவாகரத்தான முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி மோசடி செய்வதாகவும், தன் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்ற நிலையில் சதீஷ் வேறொரு பெண்ணை மணந்துக் கொண்டு, தன்னை மனைவி எனக் குறிப்பிட்டு இசை நிகழ்ச்சிகளில் பாட வைக்கிறேன் எனக் கூறி பணம் பெற்றுள்ளதாகவும், பணத்தைக் கொடுத்தவர்கள் தற்போது தன்னிடம் வந்து கேட்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் இசைவாணி.
இதுகுறித்து சதிஷிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், தனக்கும் தன் கலை பயணத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.