பாலின, சமூக அரசியல் சார்புகளை இழிவாக பேசுகிராறா? சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பை சம்பாதிக்கும் அசீம்!
பிக்பாஸ் சீசன் 6 இல் ஒருவரின் பாலின, சமூக-அரசியல் சார்புகளை இழிவாக பேசுவதை அசீம் வாடிக்கையாக கொண்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
பிக்பாஸ் அசீம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 6இல் பெரும்பாலான எபிசோடுகளில் தொடர்ந்து கமல்ஹாசனிடமிருந்து அறிவுரை பெறும் போட்டியாளராகவும் சக போட்டியாளர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கும் போட்டியாளராகவும் அசீம் இருந்து வருகிறார்.
ஒவ்வொரு முறை விமர்சனத்திற்குள்ளாகும் போதும் வார இறுதியில் கமல்ஹாசன் அறிவுரை கொடுப்பதும் பதிலுக்கு அசீம் ‘மன்னிப்பு’ கேட்பதுமே தொடர்ந்து செல்கிறது.
அவருக்கு கமல்ஹாசன் ‘ரெட்-கார்டு’ கொடுத்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற குரலும் பார்வையாளர்களிடமிருந்து வெளிப்படுகிறது.
விக்ரமனுடன் சர்ச்சை
டிசம்பர் 23ஆம் திகதி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில், சக போட்டியாளர் விக்ரமனை “ஏன் இங்கு வந்து கட்டப் பஞ்சாயத்து செய்கிறீர்கள்? கட்டப் பஞ்சாயத்து செய்து பழக்கமா? நான் சொல்வது புரிகிறதா?” என்று கேட்டதுதான் அசீமின் பேச்சு சமீபத்திய சர்ச்சை பேச்சாக உள்ளது.
இதனை சமூக வலைத்தளங்களிலும் பெரும்பாலானோர் அசீமை விமர்சித்தனர். அசீமின் இந்த பேச்சு விக்ரமனின் அரசியல் சார்பை மறைமுகமாக சாடும் விதமாகவே அமைந்திருந்தது.
அசீமிற்கு ரெட் கார்ட்
அசீமின் பேச்சுக்கள் விஷமத்தனமாக இருப்பதாகவும் மருத்துவரும் சின்னத்திரை கலைஞருமான ஷர்மிளா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன், இதனை கண்டிக்க வேண்டும் எனவும், அசீமுக்கு ‘ரெட் கார்டு’ கொடுக்க வேண்டும் எனவும் பலரும் பதிவிட்டனர்.
அதேசமயம், அசீம் நிகழ்ச்சியில் உண்மையாக நடந்துகொள்வதாக அவருக்கு ஆதரவாகவும் பலரும் பதிவிட்டனர்.
இந்நிலையில் விக்ரமன் குறித்து பேசிய அசீம் நான் ‘கட்டப் பஞ்சாயத்து’ என விக்ரமனை கூறியது அவரை தனிப்பட்ட முறையில் கூறியதுதான் தவிர, அவர் சார்ந்த சமூகத்தைக் குறிப்பிடவில்லையென்றும் கூறினார்.
உடனேயே கமல், அதனை ‘சமூகம்’ என்று குறிப்பிடக்கூடாது, “அவரின் அரசியல் சார்பை சொல்லவில்லை” எனக்கூற வேண்டும் எனத் திருத்தி கூறியிருந்தார்.
கேலிப் பேச்சுக்கள்
பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களின் தொழில்களை குறிப்பிட்டு கேலியாக பேசுவதையும் அசீம் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
விக்ரமனை ‘நெறியாளர் போன்று நடக்காதீர்கள்’, ‘இங்கு வந்து அரசியல் செய்யாதீர்கள்’ எனப் பேசியுள்ளார். முன்னர் ஊடக நெறியாளரான விக்ரமன் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் உள்ளதை குறிக்கும் விதமாக அசீம் இப்படி பேசியுள்ளார்.
அதேபோன்று, ராப் பாடகரான அசீமை ‘சுத்தி சுத்தி வந்து இங்க வந்து ராப் பாடாதீங்க” என தெரிவித்திருக்கிறார்.
மேலும், அசீம் சக போட்டியாளரான ஷிவினின் (திருநங்கை) பாலினத்தை கேலி செய்யும் விதமான உடல்மொழியையும், அவரை உருவ கேலியையும் செய்த சம்பவங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்றது.
இந்நிலையில் அசீம் மாத்திரமல்ல, பிக் பாஸ் வீட்டின் மற்ற போட்டியாளர்களும் நகைச்சுவை என்ற பெயரில் உருவக்கேலி செய்வதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.