விடை பெற்றார் 'பாசத்திற்குரிய பாரதிராஜா' - முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
காவல் துறையினரின் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் அவரது பண்ணை வீட்டு வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா (84), நேற்று (ஜூன் 10) காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
அவரது மறைவையடுத்து, இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் திரையுலகப் பிரபலங்கள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடல் நேற்று இரவு தேனி மாவட்டம் காட்ரோடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, திரையுலகினர் மற்றும் ரசிகர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இறுதிச் சடங்கில் இயக்குநர்கள் பாக்யராஜ், அமீர், பார்த்திபன், நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும், 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர். முன்னதாக, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, காவல் துறையினரின் 72 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் இன்று மாலை 4.40 மணியளவில் அவரது பண்ணை வீட்டு வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |