நெற்றியில் சந்தனம், குங்குமம் இடுவது ஏன்? பலருக்கும் தெரிந்திடாத உண்மைகள்
சந்தன மரம் பல மருத்துவப் பலன்கள் நிறைந்தது மட்டுமின்றி பெண்களின் அழகினை அதிகரிக்கவும் பயன்படுகின்றது. நாம் நெற்றியில் அணியும் சந்தனம், குங்குமத்திற்கு பின்னே பல அறிவியல் காரணங்கள் இருப்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது அதனை தெரிந்து கொள்ளலாம்.
நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளன. உடலின் பெரும்பாலான நரம்புகள் நெற்றிப்பொட்டின் வழியாகவே செல்கின்றன.
ஆகவே நெற்றிப்பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தி இருக்கிறது. ஆனால் அந்தச்சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப்படுவது நெற்றிப் பொட்டில்தான்.
அங்கு பூசப்படும் சந்தனம் நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்கிறது. நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது, வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகிறது.
பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொடி குங்குமம். இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்தால் குங்குமம் தயார்.
மஞ்சளும், காரமும் வேதிவினை புரிவதால் சிவப்பு நிறம் கிடைக்கிறது. அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது.
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.
நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையே உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும்போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி, தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும்.
மேலும் மன உளைச்சல் ஏற்பட்டு, தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
சந்தனம், குங்குமம் போன்றவற்றுக்கு குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.