இந்த ஆண்டில் கந்தசஷ்டி விரதம் இருப்பதினால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா?
முருகனை விரதம் இருந்து வழிபட உகந்த நாட்களாக கந்தசஷ்டி விரதம் முக்கியமாகிறது. ஐப்பசி மாதம் வளர்ப்பிறையில் தான் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த திதியில் தொடங்கி, சஷ்டி திதி வரையான 6 நாட்கள், கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிப்பார்கள். இந்த ஆண்டில் கந்தசஷ்டி திருநாள், 9.11.2021 செவ்வாய்க்கிழமை வருகிறது.
இதனால் விரதம் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த விரத்தில் முக்கியமாக தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகியவற்றை விடுவித்து ஆற்றல், தன்வயமுடைமை, இயற்கை உணர்வு, பேரருள் ஆகிய நற்குணங்களைப் பெறும் நோக்கில் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும், இந்த விரதம் இருப்பதன் மூலம் நம்மிடம் இருக்கும் குறைகள் நீங்கி நன்மை சேரவும், நீங்கள் அடைய நினைக்கும் அத்தனை செல்வமும் வந்து சேர உதவும்.
சூரபதுமனை சூரசம்ஹாரம் செய்து, முருகப்பெருமான் வெற்றிவாகை சூடிய தினமாக கந்தசஷ்டிவிரத நாள் பார்க்கப்படுகிறது.
எனவே அன்றைய தினம் முருகனை வழிபட்டால், நாமும் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளை கூட சுலபமாக பெற முடியுமாம்.
அடுத்ததாக, சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை நினைத்து வழிபட்டால் பிள்ளைப் பேறு கிடைக்காதவர்களுக்கு கருப்பையில் பிள்ளைப் பேறு உண்டாகும்.
இவை குழந்தைச் செல்வத்தை வழங்கும் மகத்தான விரதங்களில், அதிமுக்கியத்துவம் வாய்ந்தது கந்தசஷ்டிவிரதம்.
மேலும், கந்தசஷ்டி விரதத்தை மேற்கொள்வதன் மூலம் 16 வகையான செல்வங்களையும் பெற முடியும்.
விரதத்தில் செய்ய வேண்டியவை
விரத நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தைத் தினமும் பாட வேண்டும். முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்தல், முருகனின் திருவிளையாடல் கதைகளைப் படிப்பது நல்லது.
கந்த சஷ்டி கவசம் படித்தல், திருப்புகழ் படித்தல் மற்றும் இயலாதவர்களுக்கும் முதியோர்களுக்கும் உதவி செய்திடல் உள்ளிட்டவையால் முருகனின் அருளைப் பெறலாம்.