ஒரே ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சாப்பிடறதுல இவ்வளவு நன்மைகளா? கொடிய புற்றுநோயும் உங்களை நெருங்க அஞ்சும்
“கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை” என்ற பழமொழியே நம் உணவு பழக்கத்தில் உள்ளது. அந்தளவிற்கு, நம் முன்னோர்கள் மருத்துவக்குணமுள்ள உணவுப்பொருட்களை சமையலில் பயன்படுத்தி, உணவே மருந்தென வாழ்ந்து வந்தார்கள். அதிலும் எண்ணெய் இல்லாமல் நம் சமையல்கள் பெரும்பாலும் இருந்ததில்லை.
அப்படிப்பட்ட எண்ணெய் வரிசைகளில் ஒன்றாக அணிவகுத்து நிற்பதுதான் ‘கடுகு எண்ணெய்’. கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் கடுகு எண்ணெய் புழக்கத்தில் உள்ளது. இன்றும் வட இந்தியாவை பொருத்தவரை கடுகு எண்ணெய் அன்றாட சமையலில் புழக்கத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கத்தில் கடுகு எண்ணெய் இல்லாத சமையலே இல்லை எனலாம். உணவில் மட்டுமின்றி கடுகு எண்ணெய் அழகிற்கும் பயன்படும் ஒரு எண்ணெய்யாக இன்று உள்ளது.
நூறு கிராம் கடுகில் 884 கலோரிகள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில், போலேட்ஸ், நியாசின், தயமின், பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் பி.காம்ப்ளக்ஸ் என நிறைய விட்டமின்கள் உள்ளன. இந்த விட்டமின்களோடு, கடுகு எண்ணெய்யாய் தயாரிக்கப்படும்போது ஒமேகா 3 மற்றும் 6 அமிலங்களும் நிறைய தாதுக்களும் இணைந்து கிடைக்கின்றன. கடுகில் இருக்கும் நிறைய சத்துகள் ‘கடுகு எண்ணெய்யில்’ பெரும்பாலும் இருப்பதில்லை.
குறிப்பாக கடுகு விதையில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது, இந்த கார்போ நமக்கு பைபர் மற்றும் ஸ்டார்ச்சை தருகிறது.ஆனால் கடுகு எண்ணெய்யில் இவை அனைத்தும் இருப்பதில்லை. அதேபோல் கடுகு விதையில் இருக்கும் புரோட்டீனும், மைக்ரோ நியூட்ரீனான விட்டமின் மற்றும் மினரல்ஸ்சும் கடுகு எண்ணெய்யில் கிடைப்பதில்லை என யுஎஸ்டிஏ தகவல் குறிப்பிட்டுள்ளது. கடுகு எண்ணெய் மூன்று விதமான கொழுப்புக்கள் நிறைந்த எண்ணெய்யாக உள்ளது.
அதாவது நிறைவான கொழுப்பு, பாலிஅன்சாச்சுரேட் கொழுப்பு, மோனோன்சாச்சுரேட் கொழுப்பு இந்த கொழுப்புகள் உடலிற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பதாக உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மித மிஞ்சிய கொழுப்புதான் நம் உடலிற்கு தீங்கு விளைவிக்குமே தவிர, நல்ல கொழுப்புகள் ஆரோக்கியத்தை சீராக வைத்திருக்கதான் உதவும். அப்படி இதயத்திற்கு இதமான கொழுப்பை வழங்கும் எண்ணெய்யாக கடுகு எண்ணெய் செயல்படுகிறது.
ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய்யில் நான்கு கிராம் நிறைவான கொழுப்பு நிறைந்துள்ளது. அதனால், ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் கணக்கில் உணவில் இந்த எண்ணெய் எடுத்துக்கொண்டால் இதயத்திற்கு நல்லது என ’அமெரிக்கன் இருதய அமைப்பு’ தெரிவித்துள்ளது. பாலிஅன்சாச்சுரேட் கொழுப்பு இதில் இருப்பதால், மேலும் இதயத்தை வலுவாக்கும் அரணாக இந்த நல்ல கொழுப்புகள் இருக்கிறது.
கடுகு எண்ணெய்யை தினமும் உணவில் எடுத்துக்கொள்ளும்போது பல்வேறு நன்மைகளை நமக்கு தருகின்றது. ஏனெனில் இதிலிருக்கும் ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 அமிலங்கள் மற்றும் நல்ல கொழுப்புக்களான பாலிசாச்சுரேட், மோனோன்சாச்சுரேட் உடலுக்கு அவசியமான நல்ல கொழுப்பை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த ஒமேகா சத்தானது நம் உடம்பில் ரத்தம் உறைவது தடுப்பதோடு, உடல் வீக்கம் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அதேபோல் கடுகு எண்ணெய்யில் இருக்கும் ஒமேகா 6 புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதயத்திற்கு மட்டும் இல்லாமல், மூளையின் செயல்பாட்டைத்தூண்டி நினைவாற்றல் பெருகவும் கடுகு எண்ணெய் பயன்படுகிறது.