அப்பாவுக்காக பிக்பாஸை விட்ட குமரன்... பகிர்ந்த வீடியோவால் நெகிழ்ந்த ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 10வது சீசன், நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியில், ரசிகர்கள் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.
சின்னத்திரையில் தங்களது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பல கலைஞர்கள் இந்த சீசனில் போட்டியாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

எதிர்பாராத எலிமினேஷன், அதிரடி வைல்டு கார்டு என்ட்ரி, போட்டியாளர்களுக்கு இடையிலான மோதல்கள், கோபம், விளையாட்டு எனப் பல்வேறு உணர்வுகளுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.
ரூ. 5 லட்சத்துடன் வெளியேறிய குமரன்!
இந்த சீசனில் இறுதிவரை பயணித்து வெற்றிபெறுவார் எனப் பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் குமரன். ஆனால், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அவர் ரூ. 5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இதற்குப் பின்னால் தனது அப்பா தொடர்பான உருக்கமான காரணம் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். குமரனின் தந்தை மறதி பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறாராம். ஒரு கட்டத்தில் தனது அக்காவைக்கூட அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில், குமரனை மட்டும் நினைவில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இதனால், தந்தை தன்னையும் ஒருநாள் மறந்துவிடுவாரோ என்ற அச்சம் குமரனுக்கு ஏற்பட்டுள்ளது.
பணத்தையும் போட்டியையும் விடத் தனது தந்தையுடன் நேரம் செலவிடுவதே முக்கியம் எனக் கருதிய அவர், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார்.

அப்பாவுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடும் குமரன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, குமரன் தனது தந்தையுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். அந்த வகையில், சமையலறையில் தனது தந்தையுடன் இணைந்து சமைக்கும் அழகான வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
தந்தையுடன் கிடைக்கும் ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்பும் குமரனின் இந்தச் செயல் பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |