அவர் மட்டும் இல்லைன்னா... இன்று நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன்... - நடிகர் பாலா உருக்கம்!
அந்த நபர் மட்டும் அன்று எனக்கு கல்லீரல் தானம் செய்யவில்லை என்றால் இன்று நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்று நடிகர் பாலா உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகர் பாலா
இயக்குநர் சிறுத்தை சிவா தம்பிதான் நடிகர் பாலா. இவர் தமிழில் ‘அன்பு’ என்ற படம் மூலம் ஹீரோவா அறிமுகமானார். இதனையடுத்து, ‘காதல் கிசுகிசு’, ‘கலிங்கா’ சில படங்களில் நடித்தார். ஆனால், நடிகர் அஜீத் நடிப்பில் ‘வீரம்’ படம் தான் பாலாவிற்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் பாலாவிற்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டு கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, மருத்துவமனையில் அவருக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், பாலாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர் கூறிய நிலையில் அதிர்ஷ்டவசமாக பாலா உயிர் பிழைத்தார்.
மனம் திறந்து பேசிய பாலா
இந்நிலையில், நடிகர் பாலா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், திடீரென என் உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
மருத்துவர்கள் நான் உயிர் பிழைக்கவே மாட்டேன் என்று தெரிவித்துவிட்டனர். என் குடும்பத்தினருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஆனால், அடுத்த 6 மணி நேரத்தில் ஒரு அதிசயம் நடந்தது. ஜேக்கப் ஜோசப் என்பவர் திடீரென்று வந்து எனக்கு கல்லீரலை தானம் தருவதாக கூறினார்.
ஆனால், அந்த நபரிடம் மருத்துவர்கள் ரிஸ்க் எடுக்காதீங்க. இப்படி கல்லீரல் தானம் கொடுத்தால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறினர். உடனே ஜேக்கப் பாலாவிற்காக நான் ரிஸ்க் எடுக்கத் தயார் என்று கூறினார். ஜேக்கப் மட்டுமல்ல அவரது குடும்பமும் எனக்காக ரிஸ்க் எடுக்க தயாராக இருந்தனர்.
நான் நிறைய தானம், தர்மம் செய்திருக்கிறேன். அதையெல்லாம் ஜேக்கப் பார்த்திருக்கிறார். ஆனால், அவர் எனக்கு கல்லீரல் தானம் தருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. தற்போது என் உடல் நிலை நன்றாக தேறிவிட்டது.
இப்போது நான் ஜிம்முக்கு போக ஆரம்பித்துவிட்டேன்.
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எனக்கு சிலர் பிரச்சினை செய்தார்கள். ஒருவர் நான் எழுதுவது போல் எழுதி என் வீட்டிற்கு சென்று என் நகைகளை திருட முயற்சி செய்துள்ளார் என்று உருக்கமாக பேசினார்.