பெண்ணை மானபங்கபடுத்திய இளைஞருக்கு... வினோதமான தண்டனையை வழங்கிய நீதிபதி! பாராட்டிய கிராம மக்கள்
பெண்ணை வன்கொடுமை செய்த இளைஞர் ஒருவருக்கு நீதி மன்றம் கொடுத்த நூதன தண்டனை ஒன்று கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் லாலன் குமார் சபி (20). சலவைத் தொழிலாளரான இவர், கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஒருவரை மானபங்கப் படுத்தியுள்ளார். மேலும், அவரை பாலியல் வன்கொடுமை செய்யவும் முயன்றுள்ளார்.
இதனையடுத்து லாகஹா போலீஸ் ஸ்டேஷனில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, தனக்கு ஜாமீன் கோரி, அவர் ஜஞ்சார்புர் கூடுதல் செசன்ஸ் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
விசாரித்த நிதிபதி அவினாஷ் குமார் அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளனர். அதாவது, அந்த நிபந்தனையானது, குமார் வசிக்கும் கிராமத்தில் உள்ள அனைத்துப் பெண்களின் சேலைகளையும் இலவசமாக குமார் ஆறு மாதத்துக்கு சலவை செய்ய வேண்டும்.
அதன் பின்னர் அதை அயர்ன் செய்து ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்க வேண்டும். இதைக் கண்காணித்து ஊர் பஞ்சாயத்துத் தலைவர் நஜிமா நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமாம். அவர் இதை செய்யவில்லை என்றாலும் நீதிமன்றத்தில் பஞ்சாயத்து தலைவர் தெரிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இந்த வித்தியாசமான தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து ஊர் தலைவர் நஜிமா கூறுகையில், “கோர்ட் தீர்ப்பு மிகவும் சிறந்தது. இத்தீர்ப்பு பெண்களுக்கு மரியாதையை ஏற்படுத்திக்கொடுக்கும். அதோடு பெண்களுக்கு எதிராக மனநிலையில் இருப்பவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தும்.
துணியை துவைப்பதற்கு தேவையான சோப்பு, சலவை தூள் போன்றவற்றை வாங்கும் பொறுப்பு லாலனை சேர்ந்தது. லாலன் செய்யும் பணியை தினமும் கவனிப்பேன். எங்கள் கிராமத்தில் 225 பெண்கள் இருக்கின்றனர். இப்பெண்கள் சுழற்சி முறையில் தங்களது ஆடைகளை லாலனிடம் துவைக்க கொடுப்பார்கள்.
அவர், 6 மாத பணி முடிந்த பிறகு லாலன் பணி குறித்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்த நிதிஷ்குமார் என்பவருக்கு ஜாமீன் வழங்கிய இதே நீதிபதி, 5 ஏழை குழந்தைகளின் கல்விக்கு மூன்று மாதம் பணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.....