கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடால் பேராபத்து? யார் இந்த ஜூஸை தொடக்கூட கூடாது தெரியுமா?
உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் என்றால் அது கற்றாழை தான். இதில் பன்னிரண்டுக்கும் மேலான பினோலிக் கலவைகள் இதில் உள்ளன. மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் இதில் உள்ளன.
இவை தவிர வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி இதில் உள்ளன. கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன. கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கற்றாழை ஜூஸ் எப்படித் தயார் செய்ய வேண்டும், யாரெல்லாம் குடிக்கலாம் என்பது மிகவும் முக்கியம்.
எப்படித் தயார் செய்வது? நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும்.
அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும். பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும்.
இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.
எப்படியெல்லாம் குடிக்கலாம்? 1. காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அப்போது சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்லது. 2. காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிப்பது நல்லது. 3. கற்றாழைச் சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால் எந்த மருத்துவத்துக்கும் அசராத வறட்டு இருமல் நம்மை விட்டு வேகமாக விலகும். 4. நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்தால் மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
யாரெல்லாம் கற்றாழை ஜூஸுக்கு நோ சொல்ல வேண்டும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய்க்கான மருந்து சாப்பிட்டதும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. கற்றாழை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால் அவர்களுக்குச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துபோக வாய்ப்புள்ளது.
சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டாம். கற்றாழையும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கு உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, குடும்ப மருத்துவரை ஆலோசித்த பிறகே இவர்கள் கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டும்.
நாள்பட்ட நோய்களுக்கு ஆங்கில மருந்து எடுத்துக்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள், ஒவ்வாமை பிரச்னை உடையவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்த வேண்டாம். மொத்தத்தில், ஒருவரின் ஆரோக்கிய உடல்நிலையைப் பொறுத்து 1 - 6 வாரங்கள் வரை கற்றாழை ஜூஸ் அருந்தலாம். பிறகு ஓரிரு மாதங்கள் இடைவெளிவிட்டு, மீண்டும் தொடரலாம்.
காலை நேர நடைப்பயிற்சியுடன் கசப்பு, புளிப்பு சேர்ந்து கடைசியில் நாவுக்குப் பிடித்த இனிப்புச் சுவையையும் தரும் கற்றாழை ஜூஸ், உடலுக்கு எல்லா நன்மைகளையும் செய்யும்; புத்துணர்வும் புதுப்பொலிவும் தரும்!