என்னது நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சியா? மனிதநேயத்தின் உச்சக்கட்ட கொண்டாட்டம்
தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாயை அரவணைத்து வீட்டில் வளர்த்து வந்த நபர் அதற்கு தற்போது வளைகாப்பு நடத்தியுள்ள சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
இந்திய மாநிலமான தமிழகத்தில் மதுரை மாவட்டம் தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் (43).
காண்டிராக்டராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கு அம்சவேணி(38) என்ற மனைவியும், தமிழ்செல்வன்(22) என்ற மகனும், கல்பனா தேவி(18) என்ற மகளும் இருக்கின்றனர்.
குமரேசனுக்கு சிறு வயதிலிருந்தே செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் அதிகமான ஆர்வம் கொண்டுள்ளார். இவரது வீட்டில் நாட்டு நாய், பொமேரியன், கோம்பை, லேபர் டாக், சிப்பிப்பாறை என 10க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெருவோரம் சுற்றிய பெண் நாயை அரவணைத்து அதற்கு சில்க் சுமிதா என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில், குறித்த நாய் கருவுற்றதையடுத்து தனது வீட்டில் வளைகாப்பு நடத்த முடிவு செய்துள்ளார்.
இதன்படி உறவினர்கள் அனைவரையும் வரவழைத்து சில்க் சுமிதாவுக்கு பிடித்த எலுமிச்சை, புளி, தயிர் சாதம், பொங்கல், கேசரி என 5 விதமான உணவுகளை வழங்கியதோடு, புதிய ஆடை, மாலை அணிவித்து வளையல்கள் மாட்டி வளைகாப்பு நடத்தியுள்ளனர்.
இது குறித்து குமரேசன் தெரிவிக்கையில், நான் சிறு வயது முதலே நாய்களை வளர்த்து வருகிறேன். இவற்றினை என் வீட்டின் உறவுகளாகவே பாவிக்கிறேன். நாங்கள் என்ன உணவு சாப்பிடுவோமோ அதனையே அவைகளுக்கு பகிர்ந்து கொடுப்போம். நன்றி மறவாத இனம் என்றால் அது நாய்கள்தான். எனவே கருவுற்ற சில்க் சுமிதாவுக்கு வளைகாப்பு நடத்தினோம் என்று கூறியுள்ளார்.
