ஆங்கிலத்தில் பேசிய தொகுப்பாளர்... பொங்கி எழுந்த பிக்பாஸ் அசீம்
சென்னையில் நடைபெற்ற நடைபெற்ற நிகழ்வில், பிக்பாஸ் பிரபலம் அசீமிற்கும், நிகழ்ச்சி தொகுப்பாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த சம்பவம் குறித்து இதில் காணலாம்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விண்டோ எண்டர்டெயின்மெண்ட்ஸ் நடத்தும் தென்னிந்தியாவின் பிரீமியம் அழகுப் போட்டிக்கான லோகோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் ஏ.எல். விஜய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அதன் லோகோவை வெளியிட்டார். இந்நிகழ்வில் பிக்பாஸ் புகழ் ஆசிம், 'ஸ்டைலிஸ் தமிழச்சி' பாடல் புகழ் அக்ஸ்ரா கவுடா ஆகியோர் உடன் இருந்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் பிரபலம் ஆசிம் இந்த நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கிய பெண் தொகுப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர், "ஆங்கர் (தொகுப்பாளர்) ஐதராபாத்தில் இருக்கிறன்னு நெனச்சிட்டாங்கப் போல... இது தமிழ் மீடியா சேனல், நீ பேசுறது (ஆங்கிலம்) எதுவுமே வராதுமா" என்றார். அதற்கு அந்த தொகுப்பாளர்,"ஆங்கிலம் ஒரு standard language என்பதாலும், அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவும் அதில் பேசினேன்" என ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்.
தொடர்ந்து, கோபமடைந்த அசீம், "அப்போ தமிழ் மொழி standard இல்லையா" என திருப்பிக் கேட்டார். மேலும், தொடர்ந்த அவர், "அப்படி என்றால் இந்த நிகழ்ச்சியை நீங்கள் லண்டனில் தான் வைத்திருக்க வேண்டும். அடுத்த முறையாவது சென்னையில் நடக்கின்ற நிகழ்ச்சியில் தமிழில் பேச கற்றுக்கொள்ளுங்கள்" என கோபமாக பேசினார்.
இதை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் மற்ற பிரபலங்களும் பேச தொடங்கினர். ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கையோடு பேசிய நடிகை அக்க்ஷரா கவுடா, "தமிழ்ல தப்பா பேசினா என்ன மன்னிச்சிடுங்க" என சொல்லிவிட்டு பேச தொடங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பெண் தொகுப்பாளரிடம், பிக்பாஸ் பிரபலம் சமாதான கொடியை பறக்கவிட்டார். அசீம் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் படம் ஒன்றில் நடித்து வருகின்றார்.