குழந்தைகள் விரும்பி உண்ணும் அவல் வடை - உடனே செய்வது எப்படி?
குழந்தைகளுக்கு பிடித்தமான உணவுகளை செய்துகொடுக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைப்பார்கள். ஆனால், அதை விரும்பி சாப்பிடமாட்டார்கள் குழந்தைகள்.
இப்படிப்பட்ட குழந்தைகள் திடீரென பசிக்குது என்று சொன்னவுடன், அவர்களுக்கு ஆரோக்கியமாக உணவை சட்டென செய்து கொடுக்க இந்த அவல் வடை எளிதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வெள்ளை அவல், ஒரு கப், பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 3, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, ரவை – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர்.
செய்முறை விளக்கம்
ஒரு கப் அவலை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.
பின்னர் 5 நிமிடம் ஊறவைத்து, அவல் ஊறுகின்ற இதே நேரத்தில் வடைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இத்தோடு 2 ஸ்பூன் ரவை, 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுப்பை பற்ற வைத்து, ஒரு கடாயை வைக்க வேண்டும். பின்னர் இதில் வடை பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்ற வேண்டும்.
எண்ணெய் நன்றாக காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, வடை தட்டி, எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
சிறிது நேரத்தில் வடை சிவந்ததும் திருப்பிப் போட்டு, இருபுறமும் சிவந்தத உடன் எண்ணெயில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும்.
இப்போது சுவையான அவல் வடை ரெடி... சுடச்சுட சாப்பிட கொடுத்தால் போதும். குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்.