நான் பணத்தை எடுத்து செல்லவில்லை... நாடு திரும்புவேன் - துபாயில் இருந்து ஆப்கான் அதிபர் பதிலடி!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை தொடர்ந்து, தாலிபான் பயங்கரவாதிகள் காபூலை கைப்பற்றினர். 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் வசமானது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
இதனையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனியையும் அவரது குடும்பத்தினரையும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அவர், நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்றதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
தப்பி செல்வதற்காக விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பி சென்றார். 4 கார்களில் கொண்டு வரப்பட்ட பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர்.
ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை ஹெலிகாப்டருக்குள் ஏற்ற முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகளை ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த ஓடு தளத்திலேயே வீசிவிட்டு அஷ்ரப் கனி தப்பி சென்றதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்து இருந்தது.
ஆனால், தற்போது அஷ்ரப் கனி ஒரு வீடியோ செய்தியில் தனது மவுனத்தைக் கலைத்து உள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அவர் வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டு உள்ளார்.
அதில், துபாயில் இருந்து பேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோ செய்தியில் அவர் பேரழிவுகளைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சில் இருப்பதாகவும், நாடு திரும்ப "பேச்சுவார்த்தையில்" ஈடுபட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது காபூலில் தங்கியிருந்தால் பெரிய வன்முறையை சந்திக்க வேண்டியதிருக்கும். தாலிபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு நன்றி. தாலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை.
இது எங்கள் தோல்வி என்று அவர் கூறினார். தாலிபானுக்கு அதிகாரத்தை அமைதியாக மாற்ற விரும்பினேன். ஆனால் எனது விருப்பத்திற்கு மாறாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என கூறினார்.
மேலும், நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்துடன் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து உள்ளார்.
நான் பணம் கொண்டுவந்ததாக கூறப்படும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. அவை பொய் நாட்டின் தலைவராக எனக்கு அச்சுறுத்தல் உள்ளது என கூறினார்.