புற்றுநோய் அச்சம் இனி வேண்டாம்... இதை செய்தால் மரணத்தை வெல்லலாம்!
இன்று சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்துவரும் பிரச்சினைங்களுள் புற்றுநோய் (cancer)மிக முக்கிய இடம் வகிக்கிறது. புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று உடலின் கலங்கள் பிரிந்து பெருகுவதனால் ஏற்படும் நோய் ஆகும்.
இந்த கலங்கள் பிரிந்து பெருகி ஏனைய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சி அடைந்த நிலையில் இந்த புற்றுநோய் கலங்கள் குருதியின் வழியாக பரவுகின்றன. இது உடலில் இருக்கும் இடத்தை பொறுத்து என்ன புற்றுநோய் என பெயரிடப்படுகின்றது.
மேலும் புற்றுநோய் எந்த வயதினரையும் எந்த நாட்டவரையும் தாக்கும் வாய்ப்பு உள்ளது, சுருக்கமாக கூறினால் கலன்களின் வளர்ச்சி இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது.
புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள்
இதற்கு மிக முக்கிய காரணங்களாக புகைத்தல், சில உணவு பழக்கங்கள், சூரிய ஒளியில் இருந்து வெளிவரும் புறஊதா கதிர்கள், எச். ஐ. வி நோய் தொற்று, சில சமயங்களில் பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்பட கூடியதாக காணப்படுகின்றன.
புற்றுநோய் தொடர்பான அறிகுறிகளை நோக்குமிடத்து உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு அல்லது வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர்ச்சியான இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், உணவை விழுங்குவத்தில் சிரமம், உடல் எடையில் திடீர் மாற்றம், மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம், இயல்புக்கு மாறான இரத்த போக்கு, இரத்த கசிவு போன்றன குறிப்பிட்டப்படுகின்றது.
இந்த அறிகுறிகள் நோயின் தன்மைக்கு ஏற்ப மாறுபடலாம். புற்றுநோய்க்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை முறையை ஆரம்பிப்பதன் மூலம் மரணத்தை தள்ளிப்போட முடியும்.
ஆகையால் புற்றுநோய்க்கு ஆளான ஒருவர் இனி தன்னால் எதுவும் செய்ய இயலாது நான் சாக போகிறேன் என்ற எதிர்மறை எண்ணங்களை கைவிட்டு தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
மக்கள் மத்தியில் புற்றுநோய் குறித்தும் அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை குறித்தும் போதிய விழிப்புணர்வு அற்ற நிலையே நிலவுகிறது.
சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும்
சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடலும் இருந்தால் புற்றுநோய்களில் இருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோகளில் 30 சதவீததுக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவைகளாகவே இருக்கின்றன.
புகைத்தலை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளல், உடற்பயிற்சி செய்தல், மது மற்றும் ஏனைய போதை பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை விடயங்கள் மூலம் புற்றுநோக்கான 30 சதவீத வாய்ப்புகளை தவிர்க்க முடியும்.
இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் வருடாந்தம் புற்றுநோய் சிகிச்சைக்காக 25 ஆயிரம் பேர் வரை தம்மை பதிவு செய்து கொள்வதாகவும் சுகாதார கல்வி பணிமனையின் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் புற்றுநோய்க்கு உள்ளானவர்கள் இறுதிக்கட்டத்திலேயே சிகிச்சைக்காக வைத்தியசாலைகளை நாடுகின்றனர், இதனால் இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.
தற்போது புற்றுநோய் சிகிச்சைக்காக தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் இலங்கையிலும் அறிமுகப்படுதப்பட்டுள்ளது.
இதன் மூலம் முன்னரை விட அதிகமாகவே குணப்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன எனவே புற்றுநோயாளர்கள் சிகிச்சை குறித்து அச்சமடையாமல்
நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
மருத்துவ பரிசோதனை அவசியம்
மேலும் புற்றுநோய் சிகிச்சையின் போது ஏற்பட கூடிய உருவ மாற்றம், தலைமுடி கொட்டுதல், உடல் இளைத்தல், ஆகிய அனைத்தும் தற்காலிகமானவைகளே, குறுகிய காலத்தில் அவர்கள் மீண்டும் பழைய தோற்றத்தை பெற முடியும்.
ஆகையால் சமூகத்திற்கு பயந்தும் வெட்கப்பட்டும் சிகிச்சைகளை ஆரம்பிப்பதற்கு காலம் தாழ்த்துவதோ அல்லது சிகிச்சைகளை தவிர்ப்பதோ பிழையான காரியம்.
35 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களும் முழுமையான உடல் மருத்துவ பரிசோதனை ஒன்றை செய்துக்கொள்வது அவசியம்.
இதன் மூலம் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
பெண்களை பொறுத்தவரை மார்பக, கருப்பை புற்றுநோய்களே அதிக அச்சுறுதலாக காணப்படுகின்றன.
மார்பக புற்றுநோய்க்கு உள்ளானோரில் 470 பேர் வரை வருடந்தோறும் உயிரிழப்பதாகவும் சுமார் 12 ஆயிரம் பெண்கள் முறையான சிகிச்சை மூலம் உயிர் வாழ்வதாகவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் 2030 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 4 இலச்சத்து 30 ஆயிரம் பேர் கருப்பை புற்றுநோயால் உயிரிழக்கலாம் என உலக சுகாதார தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்காலத்தில் நோயின் உண்மையான பரிமாணத்தை அறியவும் புற்றுநோய் பரவியுள்ள இடத்தை அறியவும் எம். ஆர். ஐ ஸ்கேன், பெட் ஸ்கேன், எலும்பு ஸ்கேன், மொமோ கிராம், சிடி ஸ்கேன் போன்றவை உதவியாக உள்ளன.
நவீன மருத்துவ முறைகள்
புற்றுநோய் ஓர் உறுப்பை பாதித்துவிட்டால் அந்த உறுப்பை அகற்றாமலேயே நோயை குணப்படுத்துவதே நவீன மருத்துவத்தின் இலக்காகும். எனவே மக்கள் புற்றுநோய் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடனும், அறிவுடனும் செய்யற்பட வேண்டியது அவசியம்.
புற்றுநோய் என்பது சுகாதாரத்தில் மட்டுமன்றி சமூகத்தின், நாட்டின் அபிவிருதியிலும் தாக்கம் செலுத்துகின்றது. மேலும் இது ஒரு உலக பிரச்சினை அனைத்து நாட்டவர்களையும் அனைத்து சமூக பிரிவுகளையும் தாக்குகின்றது.
புற்றுநோய் என்பது ஒரு உயிர் கொல்லி நோய் என மட்டுமே சிலர் நினைக்கின்றனர், ஆனால் உண்மையில் நவீன மருத்துவங்களின் மூலம் முடிந்தளவு குணப்படுக்கூடியதே.
எனவே புற்றுநோய் என்றதுமே அச்சமடைய தேவையில்லை மனஉறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த நோயையும் எம்மால்
வெற்றிகொள்ள முடியும். எம்மால் முடிந்தவரை புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகளை தவிர்த்து வாழ பழகுவோம்.