மனைவி மாரடைப்பால் இறப்பு.. சந்தேகமடைந்த போலீசாரிடம் சிக்கிய கணவன்! அதிர்ச்சி சம்பவம்
மனைவியை கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்துவிட்டதாக கணவர் நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி, இந்த தம்பதிக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் ரமேஷ் குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி ரமேஷின் மனைவி ராஜலட்சுமி வீட்டில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக ரமேஷ் பலரிடமும் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பரிசோதித்தப்போது ராஜலட்சுமியின் கழுத்து பகுதியில் காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், சந்தேகமடைந்த போலீசார் ராஜலட்சுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதன் பின்னர், ரமேஷிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் குடும்ப தகராறில், மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததும், பின்னர் கொலையை மறைக்க மாரடைப்பால் இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது.
இதனால், ரமேஷை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.