பாடகி ஜானகி பற்றிய வதந்திக்கு முற்றுபுள்ளி - பேத்தி அப்சரா விளக்கம்
சமீபத்தில் பாடகி ஜானகி பற்றிய வதந்தி வைரலாகி வந்தது. இதற்கு அவருடைய பேத்தி விளக்கமளித்துள்ளார்.
பாடகி ஜானகி
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மற்றும் சில ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் உண்மையற்றவை என அவரது பேத்தி அப்சரா வைத்யுலா உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சமீபகாலமாக குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பு காரணமாக அனைவரும் ஆழ்ந்த துயரில் இருப்பதாகவும், இந்தச் சூழ்நிலையில் குடும்பத்தின் தனியுரிமையை மதித்து, அவர்களுக்கு தேவையான தனிமையை வழங்குமாறும் பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பாடகி எஸ். ஜானகி அவர்கள் தற்போது தனது குடும்பத்தினரும் நண்பர்களும் சூழ நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து பரப்பப்படும் பல்வேறு ஊகங்களுக்கும், உறுதிப்படுத்தப்படாத செய்திகளுக்கும் எந்தவிதமான அடிப்படையும் இல்லை என்றும் அப்சரா வைத்யுலா தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்கள் குடும்பத்தினருக்கு மேலும் மன வேதனையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு, சரிபார்க்கப்படாத செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில், எஸ். ஜானகி அவர்களின் குடும்பத்தினர், அவர் நலமாக இருப்பதாக மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |