ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?
மதியம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு வழக்கமான பருப்பு குழம்பு போல் இல்லாமல், மிகவும் எளிமையாக முறையில் ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பருப்பில் அதிகளலு புரதமும் தக்காளியில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் வாரம் ஒரு முறையாவது இந்த குழம்பை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 100 கிராம்
தக்காளி - 4
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
தண்ணீர் - 1/2 லிட்டர்
எண்ணெய் - சிறிது
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1/4 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் புளியை ஊறவைத்து கெட்டியாக சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் துவரம் பருப்புடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிது எண்ணெய் மற்றும் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் வரும் வலையில் வேகவிட்டு இறக்கி குளிரவிட வேண்டும். ஆறியதன் பின்னர் குக்கரை திறந்து மத்து கொண்டு லேசாக மசித்துவிட வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வரையில் வதக்கிவிட்டு, அடுதனுடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை ஊற்றி, பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் ஆந்திரா பாணியில் சுவையான தக்காளி பருப்பு குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |