ஆந்திரா பாணியில் அசத்தல் புளி சாதம்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
குழந்தைகளுக்கு பள்ளி மதிய உணவாக அதிகம் இடம்பிடிக்கும் உணவு எது என்றால், பலரின் பதிலும் புளி சாதம் தான். அதேபோல் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்போதும் முதலில் நினைவுக்கு வருவது புளி சாதம்தான்.
நீண்ட நேரம் கெடாமல் இருப்பது, சுலபமாக தயாரிக்க முடிவது, அதோடு அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ருசி என பல காரணங்களால் இது எப்போதும் முதல் தேர்வாக இருக்கிறது. ஆனால் ஒரே மாதிரியான புளி சாதத்தை அடிக்கடி செய்து கொடுத்தால், குறிப்பாக குழந்தைகள் விரைவிலேயே சலிப்படையலாம்.

அதனால், அதே புளி சாதத்திற்கு ஒரு புதிய சுவையை சேர்த்து வித்தியாசமாக செய்து கொடுத்தால் அவர்கள் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.
அதற்கான சிறந்த தேர்வுதான் ஆந்திரா ஸ்டைல் புளி சாதம். காரமும், புளிப்பும், நறுமணமும் கலந்த இந்த பாரம்பரிய ரெசிபி சுவையில் தனித்துவம் கொண்டது.ஆந்திரா மாநிலம் முழுவதும் மிகவும் பிரபலமான இந்த உணவு, அங்குள்ள பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் முக்கிய மெனுவிலும் இடம்பெற்றுள்ளது.
அப்படி பிரபல்யமான சுவை நிறைந்த ஆந்திரா ஸ்டைல் புளி சாதத்தை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சாதம் செய்வதற்கு
பச்சரிசி – ½ கப்
தண்ணீர் – 1¼ கப்
சமையல் எண்ணெய் – சில துளிகள்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
புளி மசாலா செய்வதற்கு
புளி – பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – ½ டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு (சுமார் 1–2 டேபிள் ஸ்பூன்)
வர மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் கீறியது)
கறிவேப்பிலை – சிறிதளவு
பொடியாக நறுக்கிய இஞ்சி – ½ டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெள்ளை எள் பொடி – ½ டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் புளியை ஒரு கப் சூடான நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதே நேரத்தில், கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தால், அது மொறுமொறுப்பாக இருக்கும்.
பச்சரிசியை நன்றாகக் கழுவி, அதனுடன் 1¼ கப் தண்ணீர் மற்றும் சில துளிகள் எண்ணெய் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
குறைந்த தீயில் 2 விசில் வரும் வரை சமைத்து, ஆவி முழுவதும் அடங்கிய பிறகு குக்கரைத் திறக்கவும். வெந்த சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி, அதில் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.

சாதம் நன்றாக ஆறிய பிறகு பயன்படுத்தவும். ஊறவைத்த புளியிலிருந்து சாறு பிழிந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சுமார் 1½ கப் புளிக்கரைசல் தயார் செய்து கொள்ளலாம். ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முதலில் வேர்க்கடலையை வறுக்கவும். அதன் தோல் வெடிக்கத் தொடங்கியதும், ஊறவைத்த கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர் அவற்றை எடுத்து சாதத்தின் மேல் சேர்த்து வைக்கவும். இந்த நிலையில் சாதத்துடன் கலக்க வேண்டாம். அதே கடாயில் மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, கடுகு தாளித்ததும் வர மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூளைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

இப்போது புளிக்கரைசல், உப்பு மற்றும் மஞ்சள் தூளைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மிதமான தீயில் எண்ணெய் மேலே பிரிந்து, கலவை கெட்டியான விழுதாகும் வரை கொதிக்கவிடவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, தேவையான அளவு புளி விழுதை சாதத்தில் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
இறுதியாக வெள்ளை எள் பொடியைத் தூவி, அனைத்தையும் நன்றாகக் கலந்து உப்பைச் சரிபார்க்கவும். புளிசாதத்தை மூடி வைத்து சுமார் 2 மணி நேரம் ஊறவிட்டால், மசாலாவின் சுவையை சாதத்தில் நன்றாக இறங்கவிட்டு எடுத்தால் அசசத்தல் சுவையில் ஆந்திரா புளி சாதம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |