இதயம் முதல் மூளை வரை ஆரோக்கியம் தரும் மத்தி மீன் குழம்பு - பண்ணலாமா?
The Amazing Nutritional Value of Sardines curry : மீன் குழம்பு என்றாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். அதிலும் பாரம்பரிய கிராமத்து முறையில், வீட்டிலேயே அரைத்த மசாலாக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மத்தி மீன் குழம்பின் சுவைக்கு அடிமையாகாத அசைவ பிரியர்களே கிடையாது .
தனித்துவமான மணமும், காரசாரமான சுவையும் நிறைந்த இந்தக் குழம்பு, சாப்பாட்டின் சுவையை மேலும் அதிகரிக்கும். சுவைக்கு மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் சிறந்த உணவாக மத்தி மீன் விளங்குகிறது.

மத்தி மீனில் நிறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்
அளவில் சிறியதாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்களைப் பொறுத்தவரையில் மத்தி மீன் மிகவும் சிறப்பானது. இதில் வைட்டமின் D, வைட்டமின் B12, பொட்டாசியம், நியாசின், செலீனியம், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
இவை எலும்புகளின் வலிமையைப் பேணவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மூளையின் இயல்பான செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கவும் உதவுகின்றன.
குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய அதேவேளை, அதிக ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதால் மத்தி மீனை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மத்தி மீனில் அசத்தல் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மத்தி மீன் – ½ கிலோ
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
அரைத்த தேங்காய் விழுது – 50 கிராம்

செய்முறை
முதலில் மத்தி மீனை நன்றாகச் சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவித் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.
பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையைச் சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை கிளறி வதக்க வேண்டும். இப்போது புளிக்கரைசலையும் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

இந்தக் கலவையை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனைச் சேர்க்கவும்.
மீன் உடையாமல் இருக்க மெதுவாக ஒருமுறை மட்டும் கிளறி, பாத்திரத்தை மூடி மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவேண்டும்.
மீன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து, சிறிது நேரம் ஆறவிட்டால், அவ்வளவுதான் மணமும் சுவையும் நிறைந்த காரசாரமான கிராமத்து பாணி மத்தி மீன் குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |