ரத்த சோகைக்கு முடிவு கட்டும் முருங்கைகீரை பொரியல்! இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா?
கிராமபுறங்களில் எளிதில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் முருங்கையில் எண்ணிலடங்கா ஆரோக்கிய நன்மைகளும், மருத்துவ குணங்களும் காணப்படுகின்றது.
முருங்கை இலை, பூ, காய், பிஞ்சு, பிசின், பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் ஆயுர்வேதத்தில் மகத்துவமான மருந்தாகப் பயன்படுகின்றன.

முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால்,மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும், வயதானதை தாமதப்படுத்தும், வீக்கத்தைக் குறைக்கும்.
மேலும் முருங்கை கீரையானது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதில் ஆற்றல் காட்டுவதுடன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கிறது.

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. இரும்புச்சத்து குறைப்பாட்டால் ஏற்படும் ரத்த சோகைக்கு முருங்கை கீரை அருமருந்தாக அறியப்படுகின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கை கீரையில் பிடிக்காதவர்களும் சாப்பிடும் அளவுக்கு அசத்தல் சுவையில் பொரியல் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 1
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
முருங்கைக்கீரை - 1 கட்டு
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - 2 கைப்பிடி

வறுத்து பொடிப்பதற்கு
வேர்க்கடலை - 1 கைப்பிடி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
வரமிளகாய் - 2
சீரகம் - 1/2 தே.கரண்டி
மிளகு - 1/2 தே.கரண்டி
பூண்டு - 2 பல்
துருவிய தேங்காய் - 4 தே.கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலை தூவி, கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் வதக்கி இறக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு வதக்கின்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில் சிறிதளவு நீரை தெளித்து விட்டு கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேகவிட வேண்டும்.
அதற்குள் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் வரமிளகாயையும் சேர்த்து கிளறிவிட்டு இறக்கி, ஒரு தட்டில் போட்டு குளிரவிட வேண்டும்.
பின்பு அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மிளகு சேர்த்து வறுத்து, பூண்டு பற்களை தட்டிப் போட்டு வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, நன்கு வறுத்து இறக்கி அதையும் ஆறவிட வேண்டும்.

பின்பு ஒரு மிக்சர் ஜாரில் முதலில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து, கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இரண்டாவதாக வறுத்த பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொரகொரவென்று அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக முருங்கைக்கீரை நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறிவிட்டு வேக வைத்து இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் முருங்கைக்கீரை பொரியல் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |