ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளையடித்த பலே திருடர்களுக்கு ஜாமீன்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடியவர்களுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருட்டு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டு லாக்கரில் இருந்த தங்க நகைகள், வைரம், நவரத்தின கற்கள் காணாமல் போனதாக போலீசில் புகார் கொடுத்தார். இது தொடர்பான வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கிய வேலைக்காரி
ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி மற்றும் அவரது கணவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ஐஸ்வர்யாவின் வீட்டில் இருந்து நகைகளை திருடியதை ஈஸ்வரி ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளை சென்னை மைலாப்பூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஈஸ்வரி விற்பனை செய்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
ஈஸ்வரியிடமிருந்து திருட்டு நகைகளை வாங்கிய நகைக்கடை உரிமையாளர்களிடமிருந்து, 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளிக்கட்டிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இந்தச் குற்றச்செயலில் ஈஸ்வரிக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் வெங்கடேஷ் என்பவரும் கைதானார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் 4 வருடங்களாக சிறுக சிறுக தங்க வைர நகைகளை திருடி சுமார் 1 கோடிக்கு சொகுசு வீடு வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், திருட்டு நகைகளை வாங்கியதாக மயிலாப்பூர் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
திருடியவர்களுக்கு ஜாமீன்
கைது செய்யப்பட்ட ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் 2 நாட்களுக்கு போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.