நேட்டோ படையினருக்கு உதவி செய்த நபர்களை வீடு வீடாக தேடும் தாலிபான்கள்; பீதியில் மக்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர், வெளிநாட்டு படையினருக்கு உதவி செய்தவர்கள் என அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தாலிபான்கள் அறிவித்தனர்.
இதனால், நேட்டோ மற்றும் அமெரிக்க படையினருக்கு உதவி செய்தவர்கள் சற்று நிம்மதி அடைந்திருந்தனர். இதனிடையே, ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர், அமெரிக்கா மற்றும் நேட்டோ படையினருக்கு உதவி செய்த நபர்களை தாலிபான்கள் வீடுவீடாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாங்கள் தேடும் நபர்கள் இல்லாதபட்சத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தாலிபான்கள் மிரட்டி செல்வதாக ஐ.நா. அமைப்பிற்கு உளவு செய்திகளை அனுப்பும் ரோஹிப்டோ என்ற உளவு அமைப்பு சேகரித்த தகவலில் தெரிய வந்துள்ளது.
அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு நேட்டோ படையினருக்கு உதவி செய்தவர்களை தேடும் தாலிபான்களின் செயல் அச்சத்தை ஏற்படுத்தும் உள்ளதாக கருத்துக்கள் நிலவி வருகிறது.