காளானை சூப்பை சாப்பிட்ட இரண்டு சிறுவர்கள் திடீர் உயிரிழப்பு! ஆப்கானை விட்டு வெளியேறிய பின் நடந்த சோகம்
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய இரண்டு சகோதரர்கள் விஷக்காளனை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானை முழுவதும் தாலிபான் கைப்பற்றிய நிலையில், அன்றாடம் அங்கு ஏதாவது ஒரு பதட்ட சூழ்நிலை உருவாகியே வருகிறது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி போலாந்திற்குக் குடியேறிய குடும்பத்தினர் அங்கு ஒரு முகாமில் தங்கியிருந்தனர்.
அப்போது, அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு போதாமல் காட்டில் முளைத்த விஷக்காளானில் சூப் வைத்து சாப்பிட்ட 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு சகோதர்கள் உயிரிழந்தனர்.
மேலும், ஒரு சகோதரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது அகதிகளின் விடுதியில் உணவு பற்றாக்குறையால் காளான் சாப்பிட்டதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் இதனை மறுத்து வெளிநாட்டிற்கான அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாகூப் டட்ஜியாக் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அகதிகள் முகாமில் பால், இறைச்சி, காய்கறிகள், பழங்கள், குளிர்பானங்கள் போன்ற அனைத்து உணவு பொருட்களும் ஒரு நாளைக்கு மூன்று வேளை வழங்கப்படுகிறது.
மேலும், விடுதியில் பணிபுரியும் ஊழியர்கள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தெரியாத உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.