லதா ராவின் வீடியோ எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 36 நாப்கின் வெண்டிங் மெஷின்கள்!
சென்னை விமான நிலையத்தில் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் புதிதாக 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை லதா ராவ் வீடியோ
நடிகை லதா ராவ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல விமான நிலையம் சென்றபோது திடீரென மாதவிடாய் ஏற்பட்டதாகவும், சானிட்டரி நாப்கின் வாங்குவதற்கு விமான நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் அவதிப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அவரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றதுடன், விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் வசதி இல்லாதது குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனைத்து பெண்கள் ஓய்வறைகளிலும் 36 சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த வசதி இருந்ததாகவும், தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக வந்த புகார்களால் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவசர தேவைக்காக பெண்கள் ஓய்வறைகளில் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டால், இரண்டு நிமிடங்களுக்குள் பெண் விமான நிலைய ஊழியர் சானிட்டரி நாப்கின் வழங்கும் தற்காலிக ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லதா ராவின் வீடியோவைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதுஃ