அது விபத்து அல்ல! கொலை- பகீர் கிளப்பிய புகாரில் கணவர் சொல்வது என்ன?
நடிகை சௌந்தர்யாவின் மரணம் தொடர்பாக எழுந்த புகாருக்கு அவரது கணவர் விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகையான சௌந்தர்யா தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.
கந்தர்வா என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சௌந்தர்யா பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த காலகட்டத்தில் 2004ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் நடிகை சௌந்தர்யாவும், அவரது சகோதரரும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அது விபத்து அல்ல திட்டமிட்ட கொலை என சமூக ஆர்வலரான எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் அளித்த புகார் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அந்த புகாரில், ஹைதராபாத்தின் ஜல்லேபள்ளியில் இருந்த சௌந்தர்யாவுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை நடிகர் மோகன்பாபு கேட்டதாகவும், அதை தர மறுத்ததால் திட்டமிட்டு கொலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் அந்த நிலத்தை ஆக்கிரமித்து மோகன்பாபு விருந்தினர் மாளிகை கட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் திரையுலகில் பரபரப்பை கிளப்பிய நிலையில் சௌந்தர்யாவின் கணவரான ரகு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா குறித்து வரும் தகவல்களை நான் மறுக்கிறேன், எனக்கும் மோகன்பாபுவுக்கும் நல்ல பழக்கம் உள்ளது, எங்களுக்குள் நிலத்தகராறு ஏதுமில்லை.
நிலம் தொடர்பாக எந்த பணபரிவர்த்தனைகளும் இருந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.