அரசியல் களமிறங்கப் போகிறாரா ராகவா லாரன்ஸ்? முடிவு ரசிகர்களிடம்! புதிய வீடியோவால் பரபரப்பு
நடன இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ், தனது அரசியல் வருகை குறித்து விளக்கமாக பேசி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளியில், “கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என்ற வாசகம் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறிய அவர், ஒரு சிறுகதையின் மூலம் தனது கருத்தை விளக்கினார்.

பணியை உண்மையாகச் செய்தவருக்கே இறுதியில் பெரிய பலன் கிடைக்கும் என்றும், உழைப்புக்கு கடவுள் நிச்சயம் பலன் அளிப்பார் என்றும் தெரிவித்தார்.
ராகவா லாரன்ஸ் பதிவு
தான் நீண்ட காலமாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வருவதாகவும், கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வந்ததாகவும் கூறிய லாரன்ஸ், ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது மக்களுக்கு உணவு வழங்கிய அனுபவமே அரசியல் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்ததாக வெளிப்படையாக தெரிவித்தார்.

அரசியலுக்கு வருவது குறித்து முதலில் தனது தாயாரிடம் கூறியபோது, அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாகவும், “அரசியல் சாக்கடை” என்று கூறி பல நாட்கள் தன்னுடன் பேசவில்லை என விடயத்தையும் கூறியுள்ளார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது தானும் அரசியலில் களமிறங்கத் திட்டமிட்டதாகவும், ஆனால் ரஜினி பின்னர் அந்த முடிவை கைவிட்டதால் அந்த முயற்சி தடைபட்டதாகவும் கூறினார்.

அதன்பிறகு நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது, அவருக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியதாகவும், சமீபத்திய அரசியல் மாற்றங்கள் மற்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனது தாயாரும் அரசியலுக்கு வர அனுமதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, “என் தாய்க்கு நிகராக என் ரசிகர்களை நினைக்கிறேன். நான் அரசியலுக்கு வரலாமா? அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா? என்பதை நீங்கள் கமெண்ட்களில் தெரிவியுங்கள்” என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |