ரொம்ப மனவேதனையில் இருந்தேன்.. மோசடி கும்பல் கைதுக்கு பின் நடிகர் ஆர்யா உருக்கம்!
நடிகை ஆர்யா போல் பேசி நாடகம் ஆடி இலங்கை பெண்ணிடம் இரண்டு பேர் பணம் பறித்து கைது ஆகியுள்ளனர். ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.
அந்த புகாரில் தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதாக கூறப்பட்ட வங்கி கணக்கு, மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். நடிகர் ஆர்யா கடந்த 10-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார்.
அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஜெர்மனி பெண்ணுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், ஜெர்மனி பெண்ணுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை எனவும் தெரியவந்தது.
இதன்பின்னர், சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா போல் போலி வலைதளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
வலைதள ஐபி முகவரியை வைத்து ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
மேலும், சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் ஆர்யா, “சென்னை காவல் ஆணையருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் மற்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்த சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் வெளிப்படுத்த முடியாத மன அதிர்ச்சியில் இருந்தேன். என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
I would like to thank Commissioner of Police @chennaipolice_
— Arya (@arya_offl) August 24, 2021
Additional Commissioner of Police-Central Crime Branch and
Cyber Crime Team of Chennai city for arresting the Real culprit. It was a real mental trauma which I never expressed. Love to everyone who believed in me ?