வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றப்பட்ட ஆசிட்: 50 நாட்கள் உயிருக்கு போராடிய இளம்பெண் மரணம்
பெண் ஒருவரிடம் வரதட்சணைக் கேட்டு கணவரின் வீட்டார் வாயில் கட்டாயப்படுத்தி ஆசிட் ஊற்றிய நிலையில், குறித்த பெண் 50 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் குவாலியரை சேர்ந்த இளம்பெண் சசி ஜாதவ். இவர் வரதட்சணை கொடுமையால் கொடுமை காரணமாக கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி அவரது கணவர் வீரேந்திர ஜாதவ், பெற்றோரிடம் சென்று மூன்று லட்சம் பணம் வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.
இதற்கு மேலும் வரதட்சணை கொடுக்க தன் குடும்பத்தில் சக்தி இல்லை என்று அந்த பெண் சசி ஜாதவ் வாதாடியிருக்கிறார்.
வரதட்சனை கொடுக்க முடியாத நீ எல்லாம் உயிரோடு இருந்து என்ன பிரயோசனம் என்று மனைவியிடம் ஆசிட் கொடுத்து குடிக்கச் சொல்லியிருக்கிறார்.
அவர் மறுக்கவே மாமியாரும் கணவனின் சகோதரியும் சேர்ந்து கொண்டு ஆளுக்கு ஒரு பக்கமாக அந்த பெண்ணை பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்திருக்கிறார்கள்.
ஆசிட் குடித்ததில் அவதிப்பட்ட அந்தப்பெண் குவாலியர் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குவாலியர் மருத்துவமனையில் நிலைமை மோசமானதை அடுத்து அவர் டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
50 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் . சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை அன்று அவர் உயிரிழந்துவிட்டார்.
உயிரை இழப்பதற்கு முன்பாக, ‘’என் மரணத்திற்கு காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள்’’ என்று போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவில் அவர்கள் பேசியது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.