6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியர்! காரணம் என்ன?
சீனாவில் நாள் ஒன்றில் 6 மணி நேரத்தினை கழிவறையில் கழித்த ஊழியரை நிறுவனம் ஒன்று வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
6 மணிநேரம் கழிவறையில் நபர்
சீனாவைச் சேர்ந்த வாங் என்பவர் நிறுவனம் ஒன்றில் கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டிற்கு பின்பு, ஒப்பந்தம் அல்லாத ஊழியராக அவரை நியமனம் செய்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு வயிற்று பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை செய்த இவருக்கு தொடர்ந்து வலி இருப்பதாகவே உணர்ந்துள்ளார். இதனால் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை கழிவறைக்கு சென்று வருவாராம்.
ஒவ்வொரு தடவை செல்லும் போது 47 நிமிடம் முதல் 3 மணி நேரத்தினை கழிவறையில் செலவழித்துள்ளார். இந்த நிலை 2015ம் ஆண்டு ஜுலை மாதம் வரை தொடர்ந்துள்ள நிலையில், குறித்த நிறுவனம் செப்டம்பர் மாதத்திலிருந்து கழிவறைக்கு செல்லும் நேரத்தினை கணக்கிட்டுள்ளது.
நிறுவனம் கண்காணித்ததில் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்தினை செலவிட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து, குறித்த ஊழியரை நிறுவனம் அதிரடியாக வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் மீது வாங் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் விசாரணையில், வாங் வேலையிலிருந்து நீக்கியது சட்டப்பூர்வமானது என்று தீர்ப்பளித்துள்ளது.