ஒன்றரை ஆண்டுகளாக கொரோனாவில் சிக்கிய நபர் - பெரும் போராட்டத்திற்கு பின் மீண்ட அதிசயம்!
549 நாட்களாக கொரோனாவில் சிக்கிய சிகிச்சை பெற்று வந்த நபர் தற்போது வீடு திரும்பியுள்ள சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இன்று வரை பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். தடுப்பூசிக்கு பின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 549 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இறுதியாக வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திருப்பியுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணத்தை சேர்ந்தவர் டானல் ஹண்டர்(43). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டில் அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அப்போது கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கவில்லை. இதனையடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட ஹண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து அவர் குணமடையாததால், 9 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சரியாக 549 நாட்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும், இந்த ஒன்றரை ஆண்டுகளும் ஹண்டர் தனது குடும்பத்தினரை சந்திக்கவில்லை. ஹண்டரில் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வெளியே நின்றவாறு கண்ணாடி ஜன்னல் வழியாக அவரை பார்த்து சென்றனர்.

இந்த நிலையில், பெரும் போராட்டத்திற்கு பின் ஹண்டர் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். 549 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்.
ஒன்றரை ஆண்டுகள் குடும்பத்தினர் யாரையும் நேரில் சந்திக்காமல் மருத்துவமனையில் இருந்த ஹண்டர் தற்போது தனது குடும்பத்தினரை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.