ஒரே நாளில் கோடீஸ்வரர்கள்.... 500 ஊழியர்களுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்!
ஒரே நாளில் 500 ஊழியர்களை பிரபல நிறுவனம் கோடீஸ்வரர்களாக மாற்றிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனமான ஃப்ரஷ்வொர்க்ஸ் (Freshworks). அமெரிக்காவில் உள்ள முன்னணி பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் (Nasdaq) ஃப்ரஷ்வொர்க்ஸ் நிறுவனம் 13 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மேலும், நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டபோது ஃப்ரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 36 டாலர். ஐபிஓ தொடங்கியதும் பங்கு விலை கிடுகிடுவென 21% உயர்ந்தது. அதிகபட்சமாக செப்டம்பர் 22ஆம் தேதி ஒரு பங்கு விலை 48.75 டாலராக உயர்ந்தது.
இதனால், மொத்தம் 2.85 கோடி பங்குகளை ஃப்ரஷ்வொர்க்ஸ் நிறுவனம் விற்றுள்ளது. ஃப்ரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டதாக அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை, பங்குகளாக வழங்கும் பழக்கத்தை பல நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.
அந்த வகையில், இந்நிறுவன ஊழியர்களுக்கும் பங்குகள் வழங்கப்பட்டன. தற்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியதை அடுத்து, ஊழியர்களில் பலர் கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர்.
ஃப்ரஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் IPO மூலம் அதன் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டதாக அந்நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான கிரிஷ் மாத்ருபூதம் தெரிவித்துள்ளார்.
இந்த 500 ஊழியர்களில் 70 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இதை யாரும் எதிர்பார்க்காத வகையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியிருப்பது ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது.