தாயின் மடியில் உயிரிழந்த 5 வயது குழந்தை! மருத்துவமனை வாசலில் நடந்த சோகம்
காய்ச்சலுடன் வந்த 5 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தாயின் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 வயது குழந்தைக்கு காய்ச்சல்
மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் பண்டாரே. இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ரிஷி (5) என்ற மகன் இருக்கிறார்.
இந்நிலையில், ரிஷிக்கு கடந்த 4 நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ள நிலையில், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல் குறையாமல் இருந்துள்ளது.
இதையடுத்து, குழந்தை ரிஷியை இன்று காலை ஜாபல்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் வர வேண்டிய நேரத்தை தாண்டி 2 மணி நேரமாகியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகின்றது.

தாயின் மடியில் பிரிந்த உயிர்
காய்ச்சல் அதிகமான நிலையில் பெற்றோர் மடியில் குழந்தை மயங்கி விழுந்துள்ளது. தண்ணீர் தெளித்து எழுப்பியும் கண்விழிக்காத குழந்தை தாயின் மடியிலேயே உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி தவறிழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மருத்துவ அதிகாரி உறுதியளித்துள்ளார்.